ரூ.7 லட்சத்தை பறிகொடுத்தார் ஆன்லைன் ரம்மி விளையாடிய மருத்துவமனை ஊழியர் தற்கொலை: திருச்சி அருகே சோகம்

திருவெறும்பூர்: ஆன்லைன் ரம்மியில் ரூ. 7 லட்சம் இழந்த மருத்துவமனை ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடியை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மகன் சிவசங்கர் (37). இவர் திருச்சி திருவெறும்பூர் அருகே துப்பாக்கி தொழிற்சாலை குடியிருப்பில் தங்கி துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையில் அட்டெண்டராக வேலை செய்து வந்தார். இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி ரூ. 7 லட்சம் வரை கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பள்ளி விடுமுறைக்காக  அவரது மனைவி ராஜலட்சுமி, 6 வயது மகனுடன் கடந்த வாரம் தஞ்சாவூர் மாவட்டம் கச்சமங்கலத்தில் உள்ள அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் கடன் தொல்லை காரணமாக ரவிசங்கர் கடந்த  2 நாட்களாக வேலைக்கு செல்லவில்லை. மேலும் பணம் கொடுத்தவர்கள் திருப்பி தருமாறு தொல்லை கொடுத்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு ரவிசங்கர் வீட்டிற்கு சிலர் வந்து பணம் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை வீட்டில் ரவிசங்கர் சுவரில் சாய்ந்த நிலையில் கிடந்துள்ளார். அப்பகுதியினர் பார்த்து உடனடியாக அவரை மீட்டு துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ரவிசங்கர் இறந்து விட்டதாக கூறினர்.

இது குறித்து நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அவரது மனைவி ராஜலட்சுமி கூறுகையில், ஏற்கனவே ஆன்லைன் ரம்மியில் ரூ.7 லட்சம் இழந்ததால் அதிகளவு தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். அந்த கடளை அவரது தாயார்தான் கட்டியுள்ளார் என்று கூறியுள்ளார். இந்நிலையில் மீண்டும் ஆன்லை ரம்மியில் பணத்தை இழந்ததால் ரவிசங்கர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அதேசமயம் பணம் கேட்டு வந்தவர்கள் அடித்து கொலை செய்தனரா என்றும் போலீசார் விசாரிக்கின்றனர். ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தமிழ்நாட்டில் ஏற்கனவே 40க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளது குறிப்பிட்டத்தக்கது.

Related Stories: