கெங்கவல்லி அருகே சூறைக்காற்றுக்கு 250 ஏக்கரில் மக்காச்சோள பயிர் நாசம்: மின்கம்பங்கள் சாய்ந்து சேதம்

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே சூறைக்காற்றுடன் பெய்த கனமழைக்கு, 250 ஏக்கரில் மக்காச்சோளம் பயிர் நாசமானது. மேலும், பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து சேதமடைந்ததால் விடிய, விடிய மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. வீரகனூர், கெங்கவல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு, திடீரென சூறாவளி காற்று வீசியது. கெங்கவல்லி, பள்ளக்காடு, நடுவலூர், வீரகனூர், கிழக்கு ராஜபாளையம், லத்துவாடி, பின்னனூர் உள்ளிட்ட பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர்.

இந்த பகுதிகளில் சூறாவளி காற்றுடன் லேசான மழை பெய்தது. இந்த சூறைகாற்றுக்கு பின்னனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் குமார், வடிவேலு, தங்கமணி, சதீஷ், தமிழ்ச்செல்வன் ஆகியோர் 30 ஏக்கரில் பயிரிட்டிருந்த மக்காச்சோளம் அடியோடு சாய்ந்து நாசமானது. அதேபோல், கெங்கவல்லி அருகே பள்ளக்காடு, நடுவலூர் கிராமத்தில் 220 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மக்காச்சோளம் சேதமானது. விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வரையிலும் செலவு செய்துள்ளனர். பலத்த காற்றுக்கு மக்காச்சோளம் சேதமாகியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதனை வேளாண்மைத்துறை அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல், கெங்கவல்லி மற்றும் நடுவலூர், பள்ளக்காடு பகுதியில் 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சூறைக்காற்றுக்கு சாய்ந்தன. இதனால், அந்த பகுதியில் விடிய விடிய மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவு முழுவதும் அப்பகுதி மக்கள் மின்சாரம் இல்லாமல் அவதிக்குள்ளாகினர். நேற்று காலை உதவி பொறியாளர் பெரியசாமி தலைமையிலான ஊழியர்கள் மின்கம்பங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: