திம்மராஜாம்பேட்டையில் கசக்குட்டையை அதிகாரிகள் ஆய்வு

வாலாஜாபாத்: தினகரன் செய்தி எதிரொலியால், வாலாஜாபாத் ஒன்றியம், திம்மராஜாம்பேட்டை கசக்குட்டை பகுதியில் நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட திம்மராஜாம்பேட்டையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், திம்மராஜாம்பேட்டையில் உள்ள கசக்குட்டை, இப்பகுதியில் நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. தற்போது இந்த கசக்குட்டை முழுவதும் முற்புதர்கள் முளைத்து, மழைக்காலங்களில் மழை நீர் வருவதற்கு உண்டான கால்வாய்கள் முழுவதும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளது.

மேலும், இந்த குட்டையின் சுற்றியுள்ள வீடுகளில் உள்ளவர்கள் தங்கள் வீட்டின் கழிவுநீர் மற்றும் வீட்டு உபயோக உபரி நீர்களை நேரடியாக பைப் மூலம், இந்த குட்டையில் தான் விடுகின்றனர். இதனால், குட்டை முழுவதும் மாசடைந்து துர்நாற்றம் வீசுகின்றன. குடிநீருக்கு வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய இந்த கசக்குட்டை, தற்போது சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவித்து வருகிறது. இதுகுறித்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பு செய்தி வெளியாகின.இதனையடுத்து, நேற்று பயிற்சி கலெக்டர் ஆர்பிட்ஜெயின், ஒன்றிய குழு துணை தலைவர் சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ்குமார், ஊராட்சி மன்ற தலைவர் கல்பனாஆறுமுகம், துணை தலைவர் விக்னேஷ் மற்றும் வருவாய் துறை சார்ந்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கசக்குட்டை பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வில், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், இந்த கசக்குட்டையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

Related Stories: