கடவூர், தோகைமலை ஒன்றிய பகுதிகளில் அவரை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

*அதிக மகசூல், லாபம் பெற ஆலோசனை

தோகைமலை : கரூர் மாவட்டம் கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் அவரை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அவரை சாகுபடியில் அதிக மகசூல் பெற்று லாபம் பெறுவது குறித்து முன்னோடி விவசாயிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.ஆடி, ஆவணி ஆகிய மாதங்களில் அவரை சாகுபடி செய்வதற்கு ஏற்ற பருவம் ஆகும். மேலும் மலை பகுதியில் அவரை சாகுபடி செய்வதற்கு சித்திரை மாதம் சிறந்தது ஆகும். இதேபோல் செடி அவரையை ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். அவரை சாகுபடியில் பட்டை அவரை, கோழி அவரை, பட்டை சிகப்பு, நெட்டு சிகப்பு, குட்டை அவரை போன்ற ரகங்கள் உள்ளது. இதில் பந்தல் முறையில் அவரை சாகுபடி செய்தால் ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதையும், செடி அவரை சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதையும் தேவைப்படுகிறது.

அவரை சாகுபடியில் ஈடுபடும் போது மண் பரிசோதனைகள் செய்து அதற்கு ஏற்ப உரங்களை இடவேண்டும். இதுபோல் மண் பரிசோதனை செய்து உரம் இடுவதன் மூலம் தேவைக்கு அதிகமான உரம் இடுவதை தவிர்ப்பதோடு, செலவீனங்களை குறைக்கலாம். உழுவு பணிகளை செய்வதற்கு முன்பு மண் பரிசோதனை செய்யவது முக்கியமாகும். தொடர்ந்து, வயலை பொலபொலப்பாக நன்றாக உழுவு செய்ய வேண்டும். செடி அவரை சாகுபடிக்கு பாத்தி முறையை பின்பற்ற வேண்டும்.

கடைசி உழவின் போது 5 டன் தொழு உரம் இட வேண்டும். அவரை சாகுபடியில் 4 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். இதேபோல் பருவ சூழ்நிலை மற்றும் மண்ணின் ஈரப்பதத்தினை பொருத்து நீர் பாய்ச்சுவதை மாற்றிக்கொள்ள வேண்டும். மேலும் காய் அறுவடைக்கு முதல் நாள் தண்ணீர் பாய்ச்சிய பின்பு காய்களை அறுவடை செய்ய வேண்டும். காய் அறுவடை செய்த பின்பு மறுநாளும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இல்லை என்றால் செடிகள் வாடி காணப்படும். பூ பூக்கும் போதும், காய்கள் காய்க்கும் போதும் செடிகளின் வளர்ச்சி பருவங்களுக்கு ஏற்ப தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

நடவு மற்றும் உர அளவு முறைகள்:அவரை சாகுபடியின் போது கொடி அவரைக்கு வரிசைக்கு வரிசை 10 அடியும், செடிக்கு செடி 2 அடியும் இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். இதேபோல் செடி அவரைக்கு பாத்திக்கு பாத்தி 3 அடியும், செடிக்கு செடி 1.50 அடியும் இடைவெளி விட்டு வதைகளை நடவு செய்ய வேண்டும்.பந்தல் அவரை சாகுபடி செய்யும் போது நன்றாக மக்கிய தொழு உரம் ஒரு ஏக்கருக்கு 1 டன் என்ற அளவில் குழிக்கு 2 கிலோ வீதம் இட வேண்டும். மேலும் ஒரு ஏக்கருக்கு 50 கிலோ அளவில் செடியில் இருந்து 1 அடி தள்ளி வைத்து மண் அணைக்க வேண்டும். செடி அவரைக்கும் இதேபோல் 50 கிலோ டி.ஏ.பியை இதேமுறையில் இடவேண்டும்.

இதேபோல் வேர் அழுகல் ஏற்பட்டால் செடியின் இலைகள் பழுத்து இலைகள் கொட்டியவுடன் செடி காய்ந்து விடும். வேரினை பிடுங்கி பார்த்தால் வேர் கருமை நிறமாக அழுகி காணப்படும். இதை நுகர்ந்து பார்த்தால் கெட்ட வாடை வீசும். இந்த வேர் அழுகல் நோயை கட்டுபடுத்த விதைத்த 1 வாரத்தில் டிரைக்கோடெர்மா விரிடி 2 கிலோ அல்லது 25 கிலோவை வேப்பங்கொட்டை தூள்களை அவரை வேரை சுற்றி இட்டு மண்ணை மூடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.எனவே மேற்படி முறைகளை பின்பற்றி அவரை சாகுபடியை செய்தால் குறைந்த செலவில் அதிக மகசூல் பெற்று விவசாயிகள் லாபம் பெறலாம் என்று முன்னோடி விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

Related Stories: