சீர்காழி : சீர்காழி அருகே பாலம் கட்டியும், இணைப்புசாலை அமைக்கப்படாததால் 30க்கு மேற்பட்ட மீனவ கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருவதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கொடியம்பாளையம் முதல் பழையார், தொடுவாய், திருமுல்லைவாசல், கீழமூவர்கரை, பெருந்தோட்டம், பூம்புகார், வானகிரி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களுக்கு இடையே தொடர்ச்சியாக பயணிக்க முடியாத சூழ்நிலை இருந்து வந்தது.
இதனால் மீனவர்கள் பொதுமக்கள் நீண்டதூரம் பயணித்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வரும் நிலை இருந்து வந்தது. மீனவர்கள் பொதுமக்கள் பல்வேறு பகுதிகளுக்கு எளிதாக சென்று வரும் வகையில் கடற்கரை கிராமங்களை இணைக்கும் வகையில் தமிழக அரசு கடந்த 2007ம் ஆண்டு திருமுல்லைவாசல், கீழமூவர்கரை கிராமங்களை இணைக்கும் வகையில் உப்பனாற்றில் புதிய பாலம் கட்ட சுனாமி மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரூ.27.50 கோடி ஒதுக்கப்பட்டு சுமார் 1. கி.மீ தூரத்திற்கு பாலம் கட்டும் பணி தொடங்கி 2010ம் ஆண்டு பாலப்பணிகள் முடிவடைந்தது. ஆனால் பாலம் கட்டி முடிக்கப்பட்டு பாலத்தின் இரண்டு பக்கங்களில் இணைப்பு சாலைகள் அமைக்கப்படவில்லை.
இதனால் பாலம் கட்டியும் பொதுமக்கள், மீனவர்கள் பயன்படுத்த முடியாமல் கடந்த 12 ஆண்டுகளாக பாலம் மட்டும் தனியாக அந்தரத்தில் தொங்கியவாறு காட்சி அளித்து வருகிறது. இணைப்புச் சாலை அமைக்கப்படாததால் பழையார், கூழையார், தொடுவாய், திருமுல்லைவாசல், பூம்புகார், வானகிரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மீன்களை விற்பனை செய்ய சுமார் 20 கிலோ மீட்டர் சுற்றி பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். புதிய பாலம் கட்டி 12 ஆண்டுகள் கடந்து விட்டதால் பாலம் பராமரிப்பு இல்லாமல் சேதமடையும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. கீழ மூவர்கரை பகுதியில் இணைப்புச் சாலைகள் பணிகள் தொடங்கப்பட்டு முழுமை பெறாமல் இருந்து வருகிறது. இணைப்பு சாலைகள் அமைய உள்ள இடங்களில் இடத்தின் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதில் பிரச்னை இருந்து வருவதால் இணைப்புச் சாலை அமைக்க நிலத்தை கையகப்படுத்த சிக்கல்கள் தொடர்ந்து இருந்து வருவதாக தெரிகிறது. இணைப்பு சாலை அமைக்க தேவைப்படும் இடத்தின் உரிமையாளர்களுக்கு சந்தைமதிப்புக்கு ஏற்ப உரிய தொகையை வழங்கி இணைப்புச் சாலை அமைத்து பல ஆண்டுகளுக்கு முன்புகட்டி முடிக்கப்பட்டு இருக்கும் பாலத்தில் போக்குவரத்தை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள், பொதுமக்கள், விவசாயிகள், கோரிக்கை விடுத்துள்ளனர்.