எம்.பி பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம்: சட்ட நிபுணர்களுடன் ராகுல் அவசர ஆலோசனை..!

டெல்லி: 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து மக்களவை எம்.பி பதவியிலிருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது கர்நாடக மாநிலம், கோலாரில் நடந்த தேர்தல் பிரசார பேரணியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார். அந்த கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, அனைத்து திருடர்களும் எப்படி மோடி என்ற குடும்ப பெயரை வைத்துள்ளனர்? என்று பேசியதாக தெரிகிறது. ராகுலின் இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜவினர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இதனிடையே குஜராத்தின் சூரத்தை சேர்ந்த பாஜ எம்எல்ஏவும் குஜராத் முன்னாள் அமைச்சருமான புர்னேஷ் மோடி, நீதிமன்றத்தில் ராகுலுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

ஒட்டு மொத்த மோடி சமூகத்தையும் ராகுல் அவமதித்துவிட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். சூரத் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை கடந்த 17ம் தேதி முடிவடைந்தது. வழக்கின் தீர்ப்பை 23ம் தேதி அறிவிப்பதாக நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதற்காக ராகுல்காந்தி நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். தீர்ப்பை வாசித்த தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எச்எச் வர்மா, அவதூறு வழக்கில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு எண் 499 மற்றும் 500ன் கீழ் ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்ததோடு அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கியதுடன், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு அனுமதிக்கும் வகையில் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து வழக்கறிஞர்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்தினார். இதன் அடிப்படையில் உடனடியாக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய காங்கிரசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். லண்டனில் ஜனநாயகம் குறித்து ராகுல் பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தை ஆளும் பாஜ ஒரு பக்கம் முடக்கி வரும் நிலையில், அவதூறு வழக்கில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி எம்பிக்கள், எம்எல்ஏக்கள் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றால் குற்றம் நிரூபிக்கப்பட்ட நாளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

அதன் அடிப்படையில் மக்களவை எம்.பி பதவியிலிருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். சூரத் நீதிமன்றம் விதித்த தண்டனையை தொடர்ந்து மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. ராகுல்காந்தியின் தகுதி நீக்கம், தண்டனை அறிவிக்கப்பட்ட நேற்றுமுதல் அமலுக்கு வருகிறது எனவும் கூறியுள்ளது. ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதனிடையே தகுதிநீக்கத்தை எதிர்த்து சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்போம் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

Related Stories: