ஊட்டி: நீலகிரி மாவட்டம் பந்தலூர், சின்கோனா பகுதியில் கடந்த 2016ம் ஆண்டு காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவிய நிலையில், அந்த சமயத்தில் கூடலூர் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த திராவிடமணி, பந்தலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்த ராஜா, விசிக., பாராளுமன்ற தொகுதி செயலாளர் ராஜேந்திர பிரபு உள்ளிட்ட பலர் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஊட்டி காக்காதோப்பு பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், இவ்வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி, விசிக பாராளுமன்ற தொகுதி செயலாளர் ராஜேந்திர பிரபு உள்ளிட்ட 11 பேரையும் விடுதலை செய்து நீதிபதி தமிழினியன் தீர்ப்பளித்தார்.