ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது; விழுப்புரம் - வேலூர் இருவழிச்சாலையில் 3 இடங்களில் சுங்கக்கட்டணம் வசூல்

* தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது

* பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிருப்தி

விழுப்புரம் - வேலூர் இடையே அமைக்கப்பட்ட இருவழிச்சாலையில் 3 இடங்களில் சுங்கச்சாவடிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைத்திருந்தது. தற்போது ஏப்ரல் 1ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். நீண்டகாலமாக உள்ள சுங்கச்சாவடிகளை மூட வேண்டுமென தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசின் நெடுஞ்சாலைத்துறை வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய சுங்கச்சாவடிகளை திறந்து வருவது விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே விழுப்புரம் - வேலூர் இடையே மூன்று இடங்களில் சுங்கச்சாவடிகளை அமைத்துள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

விழுப்புரத்திலிருந்து, திருவண்ணாமலை, வேலூர், திருப்பதி போன்ற அன்மீக நகரங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மாதந்தோறும் திருவண்ணாமலையில் நடைபெறும் கிரிவலத்திற்கு செல்லும் பக்தர்கள் அதிகம். அதேபோல், வேலூர், திருப்பதிக்கும் இந்த மார்க்கத்திலிருந்து அதிகளவிலான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த சாலையை கையகப்படுத்தி இருவழிச்சாலையாக அமைத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக நடந்துவந்த பணிகள் கடந்த 2022ல் முடிவடைந்தது. தொடர்ந்து இந்த சாலையில் உபயோகிப்பாளர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க வேலூர் மாவட்டம் வல்லத்திலும், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய 3 இடங்களில் சுங்கச்சாவடிகளை அமைத்துள்ளது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்.

கடந்த சில மாதங்களாக சோதனைஓட்டம் என்ற அடிப்படையில் கட்டணம் அறிவித்து வசூலிக்கப்பட்ட நிலையில், வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 3 சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் வசூலிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு சுங்கச்சாவடியை கடக்கும்போதும் கார், ஜீப், வேன் அல்லது இலகுரக வாகனத்திற்கு ஒருமுறை பயணிக்க ரூ.35 கட்டணமும், ஒரே நாளில் திரும்பிவரும் பயணக்கட்டணமாக ரூ.50, இலகுரக வணிகவாகனங்கள், இலகு பொருள் வாகனம் அல்லது மினிபேருந்துகளுக்கு ரூ.55, ஒரே நாளில் திரும்பி வரும் பயணக்கட்டணமாக ரூ.85, பஸ் அல்லது டிரக் போன்றவைகளுக்கு ரூ.115, ஒரேநாளில் திரும்பிவரும் பயணக்கட்டணமாக ரூ.175, 3 அச்சுகள் கொண்ட வணிக வாகனங்களுக்கு ரூ.130, திரும்பிவரும் பயணக்கட்டணமாக ரூ.190, பல அச்சுக்கொண்ட கட்டுமான இயந்திரங்கள் அல்லது மண் ஏற்றிசெல்லும் வாகனம் அல்லது பல அச்சுகள் கொண்ட வாகனத்திற்கு ரூ.185, திரும்பி வரும் பயணக்கட்டணமாக ரூ.275, அதிகளவு அச்சு கொண்ட வாகனத்திற்கு ரூ.225, திரும்பி வரும் பயணக்கட்டணமாக ரூ.335 வசூலிக்கப்படுகிறது.

மேலும் வணிக உபயோகம் இல்லாத உள்ளூர் வாகனங்களுக்கு 2023-2024ம் ஆண்டு விதிக்கப்படும் மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.330 பெற்று வாங்கிக்கொள்ளலாம் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. இனிகாரில் வேலூருக்கு சென்றுவர ஒருநாளைக்கு ரூ.150 சுங்கக்கட்டணமும், ஒருநாளை கடந்தால் ரூ.255 சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆன்மீக நகரங்களுக்கும் செல்லும் சாலையில் இப்படி அடுத்தடுத்து 3 சுங்கச்சாவடிகளை அமைத்துள்ளதால் பொதுமக்கள், விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் நகரை சுற்றி சுங்கச்சாவடிகள்

விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் கலியவரதன் கூறுகையில், தமிழகத்தில் வேறு எந்த நகரத்திற்கும் இல்லாத நிலை விழுப்புரத்திற்கு வந்துள்ளது. நகரத்திலிருந்து வெளியே செல்லவேண்டுமானால் திரும்பிய பக்கமெல்லாம் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு கட்டணம் செலுத்திவிட்டுதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. புதுச்சேரி மார்க்கத்தில் கெங்கராம்பாளையம், சென்னை மார்க்கத்தில் விக்கிரவாண்டி தற்போது திருவண்ணாமலை மார்க்கத்தில் தென்னமாதேவி சுங்கச்சாவடியை அமைத்துள்ளார்கள். விவசாயிகள் லாரி, வேன்களில் உரமூட்டை, வேளாண்இடுபொருட்கள், கரும்புகள் ஏற்றிவந்தாலும் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வேளாண்பொருட்களுக்கு சுங்கக்கட்டணம் கிடையாது என்றாலும், டிராக்டரில் வந்தால் மட்டுமே சலுகை அளிப்பதாக கூறுகிறார்கள். இதனை முறைப்படுத்த வேண்டுமென தெரிவித்தார்.

கிரிவல பக்தர்களுக்கு கூடுதல் சுமை

திருவண்ணாமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலத்துக்காக வருகின்றனர். அதோடு, தினமும் அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். விழுப்புரத்திலிருந்து செல்பவர்கள் ஒரு சுங்கச்சாவடியையும், வேலூர், ஆந்திராவிலிருந்து வருபவர்கள் 2 சுங்கச்சாவடிகளுக்கு கட்டணம் செலுத்திவிட்டுதான் வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தல்

விழுப்புரம் நகரையொட்டி சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ள நிலையில் கட்டணம் வசூலிக்கக்கூடாதென்று தெரிவித்துள்ளனர். விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே தென்னமாதேவி என்ற இடத்தில் இந்த சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இது விழுப்புரம் நகராட்சி எல்லையில் இருந்து 1 கி.மீ தொலைவில்தான் உள்ளது. நகரப்பகுதி விரிவடைந்து செல்லும்நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டு வருவாய்க்காக நகரையொட்டி இங்கு சுங்கச்சாவடி அமைத்துள்ளதாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வாகனங்களில் நகருக்கு வந்துசெல்பவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நகரையொட்டி உள்ள சுங்கச்சாவடியை அகற்றவேண்டுமென தெரிவித்துள்ளனர்.

Related Stories: