×

உறுப்பு தானம் உயிர் தானம்!

நன்றி குங்குமம் டாக்டர்

உலக உடல் உறுப்பு தான நாள் ஆகஸ்ட் 13


மரணத் தருவாயில் இருக்கும் ஒருவருக்கு முகமறியா  ஒருவர் தன் உறுப்புகளை  தானமாக தந்து காப்பாற்ற முன்வருவதற்கு மிகப் பெரிய கருணை வேண்டும். அந்தவகையில் உடல் உறுப்பு தானம் என்பது மனிதம் வளர்க்கும் மாபெரும் கொடைச்செயல். எனவே, உடல் உறுப்பு  திடீரென செயலிழந்து  வாழ முடியாத சூழலில் தவிக்கும் சக மனிதர்களுக்கு, வாழ்வளிக்க  ஒவ்வொருவரும் முன்  வர வேண்டும் என்னும்  விழிப்புணர்வை ஏற்படுத்தும்  வகையில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 13 -ஆம் தேதியன்று  உலக உடல் உறுப்பு தான நாள்  அனுசரிக்கப்படுகிறது.
 
உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவம்

இந்தியாவை பொறுத்தவரை   ஆண்டுக்கு சுமார் ஐந்து லட்சம் பேர் வரை  உடலில்  முக்கிய உறுப்புகளின்  செயலிழப்பினால்  மரணமடைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு மாற்று உறுப்புகள் கிடைத்தால்,  அவர்கள்  மீண்டும் தங்களது  வாழ்க்கையைத்  தொடர்ந்து  இந்த பூமியில்  வாழ முடியும். எனவே, மண்ணுக்குள் புதைந்து அழிந்து போகும் விலைமதிப்பற்ற உடல் உறுப்புகளை மற்றவர் வாழ தானம் செய்ய முன் வர வேண்டும்.  

உடல் உறுப்பு தானத்தின் வகைகள்

உடல் உறுப்பு தானத்தில் இரு வகைகள் இருக்கின்றன. ஒன்று, உயிரோடு இருக்கும்போதே உடல் உறுப்புகளை தானம் செய்வது. இதில், பாதிக்கப்பட்டவர்களின் உறவுகளே அவர்களுக்காகத் தங்களது  உறுப்புகளை  தானம்  செய்வார்கள். ஒருவரின்  சிறுநீரகம், கல்லீரலின்  ஒரு பகுதி, கணையத்தின்  ஒரு பகுதி என தானம் செய்வார்கள்.

மற்றொன்று  இயற்கையாக மரணமடைந்த ஒருவரின் உடல் உறுப்புகளை  கண்கள், இதய வால்வு, தோல், எலும்புகள் ஆகியவற்றை  அவரது  குடும்பத்தாரின்  அனுமதியுடன் தானம் செய்வது.அதுபோன்று  மூளைச்சாவு  அடைந்தவரின் இதயம்,  கல்லீரல், சிறுநீரகம், குடல், நுரையீரல் போன்றவையும்  தானமாக அளிக்கப்படுகிறது.

ஒருவர் உடல்  உறுப்பு  தானம் செய்வதன் மூலம்  குறைந்தபட்சம் எட்டு பேரிலிருந்து அதிகபட்சமாக  பனிரெண்டு பேர் வரையிலும் காப்பாற்ற  முடியும் என்கிறது மருத்துவ உலகம்.

யாரெல்லாம் தானம் செய்யலாம்

உயிருள்ள ஒருவர் உறுப்பு தானம் செய்ய விரும்பினால், அவர் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். அவரது  உடல்நிலை  சரியானதாக இருக்க வேண்டும். இயற்கையாக மரணமடைந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய எந்தவித  வயது வரம்பும் இல்லை. இவர்களது, கண்கள், கார்னியா, இதய வால்வுகள், தோல்,  எலும்பு போன்றவை தானம் செய்ய முடியும். ஆனால், இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல், கணையம், சிறுகுடல் போன்ற முக்கிய உறுப்புகளை  மூளைச்சாவு அடைந்தவர் மட்டுமே தானம் அளிக்க முடியும். புற்றுநோய்,  எச்.ஐ.வி, சர்க்கரை நோய், சிறுநீரக நோய், இதய நோய் உள்ளவர்கள்  உடல் உறுப்பு தானம் செய்ய இயலாது.

எந்த உறுப்புகளை எந்த வயது வரை தானம் செய்யலாம்

 70 வயது வரை ஒருவரது சிறுநீரகங்கள், கல்லீரல், எலும்பு போன்றவற்றை தானம் செய்யலாம்.

 50 வயது வரை  ஒருவரது  இதயம், இதய வால்வுகள், நுரையீரல் தானம் செய்யலாம்.
 60-65 வயது வரை கணையம், குடல்  தானமளிக்க முடியும்.
 100 வயது வரை  கார்னியா, தோல் தானமளிக்க முடியும்.

பதிவு செய்வது எப்படி?

உடல் உறுப்பு தானம் செய்யவிருப்பம் உள்ளவர்கள்  தங்களது விருப்பத்தை குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும். பின்னர், தமிழக அரசின் www.tnos.org என்ற இணையதளத்தில் பதிவு செய்து, அதற்கான அடையாள அட்டையையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைகளிலும் பதிவு செய்து கொள்ளலாம். இதில் பதிவு செய்தவர்கள் கண்டிப்பாக உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தானம் செய்தவர் இயற்கையாக இறந்தாலோ அல்லது விபத்தினால் இறந்தாலோ அவரது குடும்பத்தினர்களின் அனுமதியுடன்தான் உறுப்புகள் தானமாக பெறப்படும்.

 தொகுப்பு : ஸ்ரீதேவி குமரேசன்

Tags :
× RELATED கண்ணைக் கட்டிக் கொள்ளாதே!