டீசல் விலை, ஜி.எஸ்.டி வரியால் போர்வெல் தொழில் முடக்கம்: ஒன்றிய அரசின் நடவடிக்கையால் லாரி உரிமையாளர்கள் வேதனை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் 5000க்கும் மேற்பட்ட போர்வெல் லாரிகளும் தமிழ்நாட்டில் சுமார் 7000 ரிக் லாரி வாகனங்களும் இயங்கி வருகின்றன. ஒரு வாகனத்திற்கு சுமார் 15 பேர் வீதம் வேலைவாய்ப்பு பெற்றுவந்த நிலையில் இந்த தொழில் தற்போது முற்றிலுமாக முடங்கியுள்ளது. டீசல், காப்பீட்டு தொகை, உதிரி பாகங்களின் விலை உயர்வு மற்றும் போர்வெல் அமைக்க ஒன்றிய அரசு விதித்துள்ள 18 சதவிகித ஜி.எஸ்.டி வரி ஆகியவை இந்த நிலைக்கு காரணம் என போர்வெல் லாரி உரிமையாளர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

கொரோனாவிற்கு முன்பு ஒரு லிட்டர் டீசல் ரூ.65 இருந்த நிலையில் ஒரு அடி போர்வெல் அமைக்க ரூ.75 வசூலிக்கப்பட்டது. ஆனால் தற்போது டீசல் விலை ரூ.96 ஆன பிறகும் ரூ.65 மட்டுமே இயக்க வேண்டியுள்ளதாக போர்வெல் உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். திருச்செங்கோட்டதை சேர்ந்த ரிக் லாரிகள் பெரும்பாலும் வட மாநிலங்களில் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அங்குள்ளவர்களே போர்வெல் தொழில் நடத்த தொடங்கியுள்ளனர். இதனால் தொழிலை பாதுகாக்க போர்வெல் கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி இந்த மாதம் 3 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட ரிக் லாரி உரிமையாளர்கள் முடிவுசெய்துள்ளனர்.

போர்வெல் வாகனங்களுக்கு இந்தியா முழுவதும் ஒரே சாலை வரி போட வேண்டும் என்றும் போர்வெல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீனவர்களை போல தங்களுக்கும் மாநில விலை டீசல் வழங்கவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். நாட்டின் விவசாயத்துடன் தொடர்புடைய முக்கிய போர்வெல் தொழிலை நலிவடையாமல் பாதுகாக்க ஒன்றிய அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.

Related Stories: