புவிசார் குறியீடு பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை வளைகுடா நாடுகளிலும் வரவேற்பு பெற்ற மூலனூர் குட்டை முருங்கை

*முதல்வருக்கு நன்றி தெரிவித்து விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி

தாராபுரம் :  திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர், கன்னிவாடி, தாராபுரம், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில் முருங்கை என்பது விவசாயிகளின் முக்கிய பணப்பயிராக இருந்து வருகிறது. இயற்கையாகவே இப்பகுதியில் உள்ள விவசாய விலை நிலங்கள் சுண்ணாம்பு சத்து நிறைந்த நிலங்களாக இருப்பதால் இதில் விளைவிக்கப்படும் முருங்கை காயில் கால்சியம், சுண்ணாம்பு சத்து நிறைந்து காணப்படுமாம்.

உடல் எலும்புகளுக்கு வலுவையும், தாது விருத்திக்கான மூலக்கூறுகளையும் அதிகம் கொண்டுள்ளதாகவும் இருக்கும். மேலும் இந்த பகுதி முருங்கைக்கு என்று ஒரு தனி சுவையும் உள்ளது. இதன் காரணமாக இந்த முருங்கைக்காய்கள் தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவின் ஆந்திரா, விஜயவாடா உள்பட பல்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் உலக நாடுகளிலும், அதிக அளவில் வளைகுடா நாடுகளிலும் மூலனூர் முருங்கை என்றாலே நுகர்வோரிடையே தனி வரவேற்பும் உண்டு என்பது கடந்த நூறு ஆண்டுகளாக கண்டறியப்பட்ட உண்மை.

முருங்கைக் காய்களில் செடி முருங்கை, குட்டை முருங்கை என்கிற மர முருங்கை என்ற 2 ரகங்கள் உள்ளன. இவை இந்த பகுதிகளில் அதிக அளவில் பயிர் செய்யப்பட்டு வருகின்றன. நேற்று தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட்டில் இந்த மூலனூர் குட்டை முருங்கைக்கு அகில உலக அளவில் புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மூலனூர் பகுதி விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

மூலனூர் பகுதி முருங்கை சாகுபடியாளரும், மூலனூர் பேரூராட்சி தலைவருமான விவசாயி மக்கள் தண்டபாணி கூறியதாவது: உலகப் பிரசித்தி பெற்ற மூலனூர் குட்டை முருங்கை என்ற மர முருங்கைக்கு புவிசார் குறியீடு பெற வேண்டும் என்பது எங்கள் வட்டாரப் பகுதியில் விவசாயிகளின் பல்லாண்டு கால கோரிக்கையாக இருந்து வந்தது. அந்த கோரிக்கையை ஏற்று மூலனூர் குட்டை முருங்கைக்கு அகில உலக அளவில் புவிசார் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக தமிழ்நாடு முதலமைச்சருக்கு மூலனூர் முருங்கை விவசாயிகளின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

 மூலனூர் வட்டார அளவில் 2,400 ஏக்கர்களில் விவசாயிகளால் முருங்கை பயிர் செய்யப்பட்டுள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 10 டன் வரை நாட்டு முருங்கை, குட்டை முருங்கை என்ற இந்த முருங்கைக்காய்கள் விளைச்சல் காணும். அதிக காற்றடித்தாலோ, மழை பெய்தாலோ முருங்கை பூக்கள் உதிர்ந்து விடும் நிலை உள்ளது. எனவே அதுபோன்ற பருவ நிலைகளில் குட்டை முருங்கையின் உற்பத்தி கணிசமான அளவு குறைவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது.

 ஏக்கர் ஒன்றுக்கு 60 ஆயிரம் ரூபாய் செலவு செய்து ஏக்கருக்கு 120 மரங்கள் வீதம் பயிர் செய்யும்போது, பருவநிலை மாற்றம் இல்லாமல் இருந்தால் அடுத்த 15 ஆண்டுகளுக்கு இந்த மரமுருங்கை விவசாயிகளுக்கு பலன் தரும். ஒரு மூட்டை முருங்கைக்காயை பறிப்பதற்கு 600 ரூபாய் வரை கூலியாக செலவிட வேண்டி உள்ளது. ஆனால் எங்களது மூலனூர் முருங்கைக்காய்க்கு நிர்ணயிக்கப்பட்ட ஒரு விலை இல்லாத காரணத்தால் நல்ல விளைச்சல் காலங்களில் ஒரு முருங்கைக்காய் 2 ரூபாய்க்கும், சீசன் இல்லாத காலங்களில் தலா பத்து ரூபாய்க்கும் விற்பனையாவது வழக்கமாக உள்ளது.  நாட்டு முருங்கைக்கு நிரந்தரமான ஒரு விலை நிர்ணயம் செய்யப்படாத காரணத்தால் இந்த விவசாயத்தை நம்பி பயிர் செய்த விவசாயிகளில் பலர் நஷ்டத்தையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள்.

எனவே முருங்கை விவசாயிகளின் நலன் காக்க நடவடிக்கை எடுத்து வரும் தமிழ்நாடு அரசு எங்களது ஒரே கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது ஒழுங்குமுறைக்கூடங்களில் பருத்தியை விற்பனை செய்வதுபோல் முருங்கைக்காயையும் திறந்தவெளியில் ஏலம் கூறி எடுக்க ஓபன் டெண்டர் முறையை அமல்படுத்தி உத்தரவிட வேண்டும்.

இதனை ஒட்டுமொத்த முருங்கை விவசாயிகளின் கோரிக்கையாக தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பி உள்ளோம்.

உலக அளவில் மூலனூர் குட்டை முருங்கைக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுத்து வரும் அறிவிப்பு வெளியாகியுள்ள மகிழ்ச்சியான இந்த தருணத்தில் முருங்கைக்காய்களை ஓபன் டெண்டர் முறையில் விற்பனை செய்யவும் அரசு நடவடிக்கை எடுத்தால் முருங்கை விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைவோம். இவ்வாறு மக்கள் தண்டபாணி கூறினார்.

Related Stories: