உலக காடுகள் தினத்தை முன்னிட்டு வனத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி-நகராட்சி சார்பில் 200 மரக்கன்றுகள் நடவு

ஊட்டி :  உலக  காடுகள் தினத்தை முன்னிட்டு வனத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி  ஊட்டியில் நடந்தது. ஊட்டி நகராட்சி சார்பில் நேதாஜி பூங்கா, தீட்டுக்கல்  பகுதிகளில் 200 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. உலக நிலப்பரப்பில் 30  சதவீதம் காடுகள். காடு என்பது வெறும் மரங்கள் மட்டுமல்ல, இது வாழ்க்கை  கட்டமைப்பில் ஒன்று. மரங்கள் மற்றும் பிற தாவரங்கள் அடர்த்தியாகவும், அதை  சார்ந்த உயிரினங்களும் வாழும் இடம் காடு. காடுகள் அழிவதனால் ஏற்படும்  பாதிப்புகள் பற்றியும், எனவே காடுகளை பாதுகாக்க வேண்டியது குறித்தும்  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஐநா., சார்பில் ஆண்டுதோறும் மார்ச்  21ம் தேதி உலக காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தத் தினத்தில்  காடுகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும், வன வளத்தை  பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு  வருகிறது.

இந்நிலையில் வனத்துறை சார்பில் உலக வன நாளை முன்னிட்டு  விழிப்புணர்வு பேரணி ஊட்டியில் நடந்தது. இப்பேரணியை மாவட்ட கலெக்டர் அம்ரித்  கொடியசைத்து துவக்கி வைத்தார். கலெக்டர் அலுவலகம் அருகே துவங்கிய பேரணி,  சேரிங்கிராஸ் வழியாக அரசு கலை கல்லூரியில் நிறைவடைந்தது. இப்பேரணியில்  மாவட்ட எஸ்பி., பிரபாகர், மாவட்ட வன அலுவலர் கவுதம் மற்றும் சூழல்  மேம்பாட்டு குழுவினர், வனத்துறையினர், கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஊட்டி நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா  திட்டத்தின் கீழ் உலக காடுகள் தினத்தை முன்னிட்டு 21வது வார்டு லோயர் பஜார்  பகுதியில் அமைந்துள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பூங்காவில் மரக்கன்று நடவு  செய்யும் நிகழ்ச்சி நடந்தது.ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் தலைமை  வகித்து மரக்கன்றுகளை நடவு செய்தார். இதுதவிர தீட்டுக்கல் திடக்கழிவு  மேலாண்மை வளாகத்திலும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில்  200 சோலை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சியில் நகராட்சி நகர்  நல அலுவலர் ஸ்ரீதர், சுகாதார ஆய்வாளர் மகாராஜன் உள்பட பலர் கலந்து  கொண்டனர்.

Related Stories: