கடையம் அருகே மீண்டும் யானைகள் அட்டகாசம்-யானை விரட்டியதால் தப்பித்த விவசாயி

கடையம் :  தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் புலி, சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்ச்சியாக உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை தருமபுரம் மடம் ஊராட்சி கடனாநதி அணை அடிவாரத்தில் காஞ்சி மடத்தின் இடத்தை குத்தகைக்கு எடுத்திருந்த செய்யது அலி என்பவர் வயலில் புகுந்த யானை கூட்டம் தென்னை, நெல் பயிரை சேதப்படுத்தி சென்றது.

இந்நிலையில் நேற்று அதிகாலை ஒரு குட்டி உட்பட 3 காட்டு யானைகள் மீண்டும் அதே தோட்டத்தில்  நுழைந்து நெல் பயிரை சேதப்படுத்தியது.

யானை புகுந்தது தெரிந்து அங்கு காவலில் இருந்த கருப்பசாமி என்பவர் யானையை லைட் அடித்து விரட்ட முயற்சி செய்தார். ஆனால் யானை கருப்பசாமியை  விரட்டியதில் பதறி அடித்து ஓடி கடனா அணை பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே சென்று தனது உயிரை காப்பாற்றிக் கொண்டார்.இதுகுறித்த தகவலின் பெயரில் கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி தலைமையில் வனக்காப்பாளர்கள் ரமேஷ்பாபு, மணி, ராஜசுப்ரியா, வேட்டை தடுப்பு காவலர்கள் சுதாகர், மணிகண்டன், மாரியப்பன், பாலகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பட்டாசு வெடித்தும், தீப்பந்தம் கொளுத்தியும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

மேலும் யானைகள் வேறு எங்கும் முகாமிட்டுள்ளதா எனவும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர். தற்போது அதிகாலை நேரத்தில் யானை கூட்டம் வயல் பகுதியில் வருவதால் காவல் பணியில் இருக்கும் விவசாயிகள் பீதியில் உள்ளனர்.எனவே வயல்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் யானை கூட்டத்தை கட்டுப்படுத்துவதுடன், சேதமான பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: