கலசபாக்கம் தொகுதியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு செய்யாற்றின் குறுக்கே 3 இடங்களில் ₹60 கோடியில் உயர் மட்ட பாலங்கள்

*பொதுமக்கள், மாணவர்கள் மகிழ்ச்சி

கலசபாக்கம் :  திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் கரையோர கிராமங்களை பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதி கலசபாக்கம். இதில் போளூர், கலசபாக்கம், புதுப்பாளையம், ஜவ்வாது மலை ஒன்றியங்களை சேர்ந்த 94 கிராம ஊராட்சிகள் இத்தொகுதியில் உள்ளன. செய்யாற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும்போது பள்ளி மாணவர்கள் விவசாயிகள் பொதுமக்கள் பல கிராமங்களை சுற்றியும் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள  வேண்டிய சூழல் இருந்து வந்தது. அதிமுக ஆட்சியில் பழங்கோயில் முதல் பூண்டி வரை செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

அதேபோல் தென் மகாதேவ மங்கலம் முதல் கீழ்தாமரைப்பாக்கம் வரையிலும், சோழவரம் பூவாம் பட்டு கீழ்பொத்தரை பகுதியில் செய்யாற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டித் தரப்படும் என்று அதிமுக ஆட்சியில் வாக்குறுதிகள்  அளித்தனர். விவசாயிகள் அதிகம் உள்ளதால் செய்யாற்றின் குறுக்கே எப்படியும் உயர் மட்ட பாலம் கட்டப்படும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் அதிமுக ஆட்சியில் சொன்ன வாக்குறுதிகள் காற்றில் பறந்தது.

இந்நிலையில் திமுக ஆட்சியில், பொதுமக்களின் 20 ஆண்டுகால கோரிக்ைக நிறைவேற்றப்படுகிறது. பழங்கோயில் முதல் பூண்டி தென்மகாதேவமங்கலம் முதல் கீழ் தாமரைப்பாக்கம் சோழவரம் பூவாம்பட்டு கீழ் பொத்தரை பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என்று அமைச்சர் எ.வ. வேலு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி அளித்தார். மேலும் எம்பி சி.என்.அண்ணாதுரை எம்எல்ஏ பெ.சு.தி சரவணன் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரிடம் தொடர்ந்து வலியுறுத்தியதின் பேரில் நபார்டு திட்டத்தின் மூலம் 3 இடங்களில் செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலங்கள் கட்டித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பணி மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

தலா ₹20 கோடியில், 3 இடங்களில் மொத்தம் ₹60 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதற்காக மண்பரிசோதனை செய்யும் பணிகள் முடிந்துள்ளது. தொடர்ந்து திட்ட மதிப்பீடு தயாரித்து டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் பூமி பூஜை போட்டு பணிகள் தொடங்க உள்ளது. இதனால் செய்யாற்றின் கரையோரங்களில் உள்ள பொதுமக்கள் மாணவர்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விரைவில் நிரந்தர நடைபாலம்

கலசபாக்கம் வட்டத்தில் கடந்த ஆண்டு மாவட்டத்திலேயே அதிக அளவில் பெய்த மழையின் காரணமாக பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் சிறுவள்ளூர், வெள்ளந்தாங்கிஸ்வரர் கோயில், கெங்கல மகாதேவி ஆகிய பகுதிகளில் இருந்த தரை பாலங்கள் அடித்து செல்லப்பட்டன. அப்போது கலெக்டர் முருகேஷ், எம்பி சி.என். அண்ணாதுரை எம்எல்ஏ பெ.சு.தி சரவணன் அப்போதைய கூடுதல் கலெக்டர் பிரதாப் ஆகியோர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து அடித்துச் செல்லப்பட்ட பாலங்களுக்கு மாற்றாக, தற்காலிக பாலம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது விரைவில் நிரந்தர நடைபாலம் கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: