×

வாய்ப்புண்களைப் போக்கும் மணத்தக்காளி கீரை

நன்றி குங்குமம் டாக்டர்

கீரைகளில் மணத்தக்காளிக்கு ஒரு முக்கியமான இடமுண்டு. எல்லா பகுதிகளிலும் எளிதாகக் கிடைக்கக்கூடிய கீரை இது. கொங்கு வட்டாரப் பகுதிகளில் இதனை சுக்கட்டிக் கீரை என்றும் சொல்வார்கள். தென் தமிழகப் பகுதிகளில் மிளகுத் தக்காளி, குட்டித் தக்காளி என்றும் அழைப்பார்கள்.

மணத்தக்காளிக் கீரையில் கருப்பு, சிவப்பு என இருவகைகள் உள்ளன. இரண்டுமே குணத்தில் ஒன்றுதான். சித்தர்கள் மணத்தக்காளிக் கீரையை காயகற்ப மூலிகைகளில் ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளனர். காய கற்பம் என்பது உடலை கற்சிலை போன்று நீடித்த நாள் நரை, திரை, மூப்பு, பிணிகள் அணுகாதவாறு வாழச் செய்வது. மணத்தக்காளி கீரையின் இலை, காய், கனி, வேர் இவற்றை ஊறுகாய், வற்றல், சூப் செய்து உண்ண திருமணத்தால் உண்டாகும் மகிழ்ச்சி (மனத்துக் களி) உண்டாகி உயிர் நீடித்த நாள் உடலில் வாழ உடல்நலம் நல்கும் என்று தேரையர் தமது யமக வெண்பா நூலில் கூறியுள்ளார். இதனால்தான் இதற்கு மணத்தக்காளி என்ற பெயர் வந்தது போலும்.

100 கிராம் மணத்தக்காளிக் கீரையில் 24.9% புரதமும், 53% கார்போஹைட்ரேட்டும், 4.6% தாவரக்கொழுப்பும், 6.8% நார்ச்சத்தும் உள்ளன. மேலும்,  75 மி.கி. பாஸ்பரஸ், 8.5 மி.கி. கந்தகச்சத்து, 17.3 மி.கி. கால்சியம், 247 மி.கி. மக்னீசியம், 42.8 மி.கி. பொட்டாசியம், 13.1 மி.கி இரும்புச்சத்து உள்ளன. இதில்,  355 கலோரி ஆற்றலும் உள்ளது. இது தலைமுடி வளர்ச்சிக்கும், ரத்த உற்பத்திக்கும், எலும்பு, பல் ஆரோக்கியத்துக்கும் மிகவும் நல்லது. மணத்தக்காளிக் கீரையிலுள்ள அட்ரசைடுபி (UttrasideB) என்ற தாவர வேதிப்பொருள் கல்லீரல் வீக்கம், கல்லீரல் புற்றுநோய்க்கு மருந்தாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள்

*மணத்தக்காளிக் கீரையைக் கறியாக, பொரியலாக, உண்டுவந்தால் மார்பில் இருமல், மார்பிலுள்ள கோழை, இரைப்பு நோய்கள் நீங்கும் என்பதை கீழ்க்கண்ட தேரையர் காப்பிய பாடல் மூலம் அறியலாம்.

மணத்தக் காளியுண மார்பினிற்பையுளின் கணத்தினிற்
புறப்படு கயமுத லறுமே
- தேரர் காப்பியம்

*மணத்தக்காளி கீரையுடன், சின்ன வெங்காயம், சீரகம், உப்பு சேர்த்து சூப் செய்து குடித்தால் வாய்ப்புண், வாய் வேக்காடு, குடல் புண் நீங்கும்.
மணத்தக்காளி யிலைக்கு வாய்க்கிரந்தி
வேக்காடு மாறுங்காண்
-    அகத்தியர் பொருட்பண்பு நூல்

*மணத்தக்காளி இலைச்சாறு 30 மி.லி. வீதம் தினம் இருவேளை குடித்துவந்தால் உடல் சூடு, ரத்தசோகை, பெருவயிறு நீங்கும்.

*மணத்தக்காளி கீரையை வாரந்தோறும் சாப்பிட்டுவந்தால் நாட்பட்ட மலச்சிக்கல் நீங்கும், உடலை வாட்டி வதைக்கும் பலம் மிகுந்த வாத நோய்கள் தீரும், நெடுநாளான கபமும்
நீங்கும்.

மலமிளகுந்தானே மகாகபமும் போம்
பலமிகுந்த வாதம் போம் பார்க்கும்
- அகத்தியர் குணவாகடம்

*மணத்தக்காளி கீரையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இதை உணவில் எடுப்பவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் உருவாகியிருந்தால் அது கரையும். உடலில் சேரும் உப்புக்களை, சிறுநீர் வழியாக வெளியேற்றும். கோடை காலத்தில் ஏற்படும் நீர்ச்சுருக்கு, சிறுநீர் கடுப்புக்கு இது ஒரு சிறந்த மருந்து.

*மணத்தக்காளி கீரையுடன், சிறிதளவு மிளகு, உப்பு, ஒரு கிராம்பு சேர்த்து காய்ச்சிக் குடித்துவந்தால் மூச்சுத்திணறல், வறட்டு இருமல், நெஞ்சிலுள்ள சளி நீங்கும்.

*கருத்தரிக்க வேண்டும் என விரும்பும் பெண்கள் மணத்தக்காளி வற்றல்-50 கிராம், பெருங்காயம்-10 கிராம், ஓமம்-5 கிராம் எடுத்து, இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து, தினமும் காலை மாலை இருவேளை சாப்பிட்டு வந்தால் கருப்பையில் கரு தங்கும்.

*மணத்தக்காளி கீரையை, நெய்யில் வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வந்தால், நாட்பட்ட வாய்ப்புண்கள், குடல்புண்கள் சூரியனைத் கண்ட பனிபோல் விரைவில் நீங்கும்.

மணத்தக்காளியை சாதாரணமாகப் பொரியல் செய்து சாப்பிட்டாலே உடல் சூடு தணியும். வாய்ப்புண், குடல்புண், உள்ளுறுப்புகளில் உருவாகியிருக்கும் அழற்சி (Inflammation) ஆகியவை குணமாகும்.மூட்டு வீக்கத்தாலும் வலியாலும் அவதிப்படுபவர்கள் மணத்தக்காளிக் கீரையின் இலைகளை வதக்கி அந்த இடத்தில் ஒத்தடமாகக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தொகுப்பு: திலீபன் புகழ்

Tags :
× RELATED கண்ணைக் கட்டிக் கொள்ளாதே!