வாணியம்பாடி அருகே கூட்டுறவு சங்க இடத்தில் கூடுதல் அரசு பள்ளி கட்டிடம் கட்டும் பணி தடுத்து நிறுத்தம்-ஆர்டிஓ தலைமையில் சமரச பேச்சுவார்த்தை

வாணியம்பாடி : வாணியம்பாடி அருகே கூட்டுறவு சங்க இடத்தில் கூடுதல் அரசு பள்ளி கட்டிடம் கட்டும் பணியை கூட்டுறவு சங்க நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தியதால ஆர்டிஓ தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியில் அரசு ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளியில், போதிய இட வசதி இல்லாததால் இந்த கல்வியாண்டில் அரசு பள்ளியில் புதிதாக துவக்கப்பட்ட ஆங்கில வழி கல்வி முறையில், எல்கேஜி மற்றும் யுகேஜி மாணவர்கள் சேர்க்கை நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பள்ளி வளாக பகுதியில் அனைத்து மாணவர்களும் படிக்க இட வசதி இல்லாததால், அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலை கடை கட்டிடத்தில் பள்ளி மாணவர்களை அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். எனவே, பள்ளி வளாகப் பகுதியில் கூடுதல் கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் அரசிடம் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ₹71 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு புதிதாக கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

மேலும், கடந்த மாதம் வேலூரில் நடைபெற்ற கள ஆய்வு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக, புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த நிலையில், கலெக்டரின் ஒப்புதலோடு நேற்று முன்தினம் வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த் துறையினர் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு  இடத்தினை அளவீடு செய்து, பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டனர்.

அப்போது, ஜேசிபி இயந்திரத்தின் மூலம் பள்ளம் தோண்டி கொண்டிருந்தபோது, பள்ளிக்கூட கட்டிடம் கட்ட தேர்வு செய்யப்பட்டிருக்கும் இடம் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான இடம் என்று கூறி, கொல்லகுப்பம் கூட்டுறவு சங்க தலைவர் குமார் மற்றும் சங்க உறுப்பினர்கள் பள்ளிக்கூட கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, தகவல் அறிந்து விரைந்து வந்த வாணியம்பாடி தாலுகா சப் இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் தீவிர விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று மாலை வாணியம்பாடி ஆர்டிஓ அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா முன்னிலையில் நடைபெற்ற சமாதான பேச்சு வார்த்தையில், அரசுக்கு சொந்தமான இடத்தை யாரும் உரிமை கொண்டாட கூடாது. அந்த இடத்தில் ஏற்கனவே அளித்த அனுமதியுடன் பள்ளி கட்டிடம் கட்டிக் கொள்ளலாம் என வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா தெரிவித்தார்.  

Related Stories: