வண்டலூர் அருகே பரபரப்பு தனியார் மருத்துவமனையில் வாலிபர் பலி: உறவினர்கள் முற்றுகை

கூடுவாஞ்சேரி: வண்டலூர் அடுத்த ரத்தினமங்கலம் கிராமம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த டில்லிகுமார் (48) கொத்தனார். இவருக்கு மனைவி இன்பநாயகி (45), மகன் பரத்குமார் (25), மகள் சந்தியா (23) ஆகியோர் உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று பரத்குமாருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. உடனே அவரை உறவினர்கள் ரத்தினமங்கலத்தில் உள்ள தனியார்  மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அப்போது, அவரை பரிசோதித்த டாக்டர்கள் பரத்குமாருக்கு அப்ரண்டீஸ் உள்ளது. உடனடியாக ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று காலை பரத்குமார் திடீரென உயிரிழந்த தகவல் அவரது பெற்றோருக்கு தெரிய வந்தது.

இதனை அடுத்து, அவரது பெற்றோர், உறவினர்கள்  100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு டாக்டர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்தது தாம்பரம் உதவி போலீஸ் கமிஷனர் அதிவீரபாண்டியன் மற்றும் தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, பொதுமக்கள் கூறுகையில்,  டாக்டர்களின் தவறான சிகிச்சைனால் பரத்குமார் உயிரிழந்து விட்டதாகவும், இதுபோன்று ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். எனவே, இனிமேல் இதுபோன்ற மருத்துவமனை இப்பகுதியில் இயங்கக்கூடாது என்றும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக மேற்படி மருத்துவமனையை இழுத்து மூட வேண்டும்.

இல்லை என்றால் மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்துவோம் என்று ஆவேசமாக கூறினர். இதையடுத்து,  போலீசார் அதி விரைவு படையினரை வரவழைத்து மருத்துவமனை முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். இதுகுறித்து கல்லூரி மருத்துவமனையின் முதல்வரிடம் கேட்டதற்கு, பரத்குமாருக்கு ஏற்கனவே தைராய்டு பிரச்னை இருந்து வருகிறது. இதற்காக அவர் மாத்திரை சாப்பிட்டு வருகிறார். மேலும் அவருக்கு அப்ரண்டீஸ் ஆப்ரேஷன் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு சரியான முறையில் சிகிச்சை அளித்து வந்தோம்.

இதனையடுத்து காலை 10 மணி அளவில் அவருக்கு ஆபரேஷன் செய்வதற்கு முன்பு மயக்க மருந்து செலுத்தினோம். அது அவருக்கு ஒவ்வாமையின் காரணமாக ஒத்துக்கொள்ளவில்லை. இதனை அடுத்து அதற்கான தீவிரச் சிகிச்சை அளித்து வந்தோம். அப்போது அவருடைய இருதயத்தின் பல்ஸ் குறைந்து கொண்டே வந்தது. அவரைக் காப்பாற்ற டாக்டர்கள் எவ்வளவோ போராடினர். ஆனாலும் அவர் எதிர்பாராத விதமாக உயிரிழர்ந்து விட்டார். இதில் சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது எந்த ஒரு தவறும் இல்லை என்றார்.

Related Stories: