கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்: அமைச்சர் தா.மோ. அன்பரசன் தகவல்

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகேயுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓரிரு மாதத்தில் திறந்து வைக்க உள்ளார் என்று ஆதனூர் திமுக ஊராட்சி பொது கூட்டத்தில் அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் தெற்கு ஒன்றியம் ஆதனூர் திமுக ஊராட்சி சார்பில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70ம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கழக மூத்த முன்னாடிகள் 70 பேருக்கு பொற்கிழி வழங்கும் விழா மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் ஆதனூர் ஊராட்சிக்கு உட்பட்ட டிடிசி நகரில் உள்ள கோயில் வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில், ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் டி.தமிழமுதன் தலைமை தாங்கினார்.

துணை தலைவர் செல்விரவி, எஸ்.இ.டி.சி.தொழிற்சங்கத்தின் முன்னாள் பொது செயலாளர் வீரராகவன், கிளை செயலாளர்கள் சையதுகலீல், ஞானபிரகாசம், தமிழ்ச்செல்வன், கவிக்குமார், அருணாகரன், பழனி, வெங்கடேசன், ரவி, வார்டு கவுன்சிலர்கள் சுந்தர், வசந்திகவிக்குமார், நித்யா என்ற தியாகு, ஜெயந்திபழனி, சுமதிவெங்கடேசன், கலைச்செல்விதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஒன்றிய கவுன்சிலர் மலர்விழிதமிழமுதன் அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளரும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன், திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன்பிரசன்னா, தலைமை பேச்சாளர் மலர்மன்னன், காஞ்சிபுரம் மாவட்ட சேர்மன் படப்பை ஆ.மனோகரன் ஆகியோர் கலந்துகொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு மூத்த முன்னோடிகள் 70 பேருக்கு பொற்கிழிகளை வழங்கினர்.

பின்னர் மகளிர் தின விழாவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 1000 பெண்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கினார்.பின்னர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ‘‘எனக்கு 70 தியாகிகளுக்கு பொற்கிழி வழங்குவது மகிழ்ச்சியளிக்கின்றது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் மிக எளிதாக வரவில்லை. கடின உழைப்புக்கு பின் முதல்வராக பணியாற்றி வருகின்றார். மத்தியில் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியினால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. அவர்களுக்கு முட்டு கொடுப்பவர்கள்தான் அதிமுகவினர். மேலும் தமிழகத்தில் மு.க.ஸ்டாலினுக்கு வரலாறு உள்ளது. ஆனால், அதிமுகவின் இடைகால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு என்ன வரலாறு உள்ளது?

சென்னை அருகே ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை ஓரிரு மாதத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.’’ என கூறினார். அப்போது, அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு நினைவு பரிசாக ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழமுதன் செங்கோல் மற்றும் கலைஞரின் உருவ படத்தை வழங்கினார். இதில் குன்றத்தூர் ஒன்றிய சேர்மன் சரஸ்வதிமனோகரன், வடக்கு ஒன்றிய செயலாளர் வந்தேமாதரம், துணை சேர்மன் உமாமகேஸ்வரி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் எத்திராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் டிடிசி நகர் கிளை செயலாளர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

Related Stories: