அம்ரித் பாரத் நிலைய மறுவடிவமைப்பு திட்டத்தில் திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு ஒன்றிய அரசு ரூ.10 கோடி ஒதுக்கீடு: அடிப்படை வசதிகள் மேற்கொள்ள பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை

திருவள்ளூர்: அம்ரித் பாரத் நிலைய மறுவடிவமைப்பு திட்டத்தில் திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு ஒன்றிய அரசு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதையடுத்து, இங்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ள பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்ட தலைநகரான திருவள்ளூர் நகர மக்களின் பிரதான போக்குவரத்தாக இருப்பது ரயில் போக்குவரத்து ஆகும். தற்போது திருவள்ளூர் ரயில் நிலையம் வழியாக நாள்தோறும் 180 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. மேலும் 22 எக்ஸ்பிரஸ் ரயில்கள் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. திருவள்ளூர் ரயில் நிலையத்தை நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பயணிகள் பயன்படுத்துகின்றனர். திருவள்ளூர் ரயில் நிலையத்தை என்.எஸ்.ஜி. 2 (நான் சபர்பன் கிரேட்2) என்று ரயில்வே நிர்வாகம் தரம் பிரித்துள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் ரயில் நிலையம் உள்ளது.

ரயில்வே கோட்ட, ரயில்வே தலைமை இடமான திருச்சி, சேலம் மற்றும் பாலக்காடு ஆகிய ரயில் நிலையங்கள் என்.எஸ்.ஜி. 3 என்ற நிலையில் இருக்கும்போது, திருவள்ளூர் ரயில் நிலையம் அதற்கும் ஒரு படி மேலே என்.எஸ்.ஜி. 2 என்ற நிலையில் உள்ளது. திருவள்ளூர் ரயில் நிலையம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இப்படிப்பட்ட திருவள்ளூர் ரயில் நிலையத்தை அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.10 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. இதற்கு திருவள்ளூர் ரயில் பயணிகள் சங்கத்தினர் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். மேலும் ரயில்வே நிர்வாகத்திற்கு ரயில் பயணிகள் சங்கத்தினர் விடுத்த கோரிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் ரயில் நிலையத்தில் தற்போது உள்ள 6 நடைமேடையில் பல இடங்களில் மினி பிளாட்பார்ம் ஷெல்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒன்றிய அரசு ஒதுக்கிய ரூ.10 கோடி நிதியில், அதிக பயணிகளுக்கு இடமளிக்க, ஸ்டேஷனின் மேற்குப் பகுதியில் உள்ள 6 நடைமேடைகளிலும் 12 பெட்டிகளுக்கான பெரிய நடைமேடை ஷெல்டர்கள் அமைக்கப்பட வேண்டும். நடைமேடை எண் 1,2 மற்றும் 3ன் கிழக்குப் பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயில்களில் வரும் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக நடைமேடை ஷெல்டர்கள் அமைக்கப்பட வேண்டும். இப்போது உள்ள உயர்மட்ட மேம்பாலம் மற்றும் பயணிகள் சுரங்கப்பாதை நிலையத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. ஆனால் ஸ்டேஷனின் கிழக்கு முனையில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில்களில் இருந்து இறங்கும் பயணிகள், ஸ்டேஷனின் மேற்கு முனை வரை தங்கள் கனமான லக்கேஜுடன் நடக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எக்ஸ்பிரஸில் இருந்து லோக்கல் ரயில்களுக்கு மாறும் பயணிகளின் வசதிக்காக 6 நடைமேடைகளையும் இணைக்கும் பிளாட்பாரம் எண் 1க்கு நடுவில் உயர் மட்ட நடை மேம்பாலம் அமைக்க வேண்டும்.

நடைமேடை எண் 1, 3 மற்றும் 4ல் நவீன ரயில்பெட்டிகள் வழிகாட்டுதல் பலகை வைக்கப்பட வேண்டும். இப்போது ஜிபிஎஸ் கடிகாரம் நடைமேடை எண் 3 மற்றும் 4ல் மட்டுமே உள்ளது. 6 நடை மேடைகளிலும் மின்னணு ஜிபிஎஸ் கடிகாரம் வைக்கப்பட வேண்டும். நடைமேடை எண் 1 மற்றும் 6ல் லிப்ட் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். நடைமேடை எண் 4 மற்றும் 5 ஆகிய நடைமேடைகளில் எஸ்சலேட்டர் வசதி செய்யப்பட வேண்டும். இந்த நடை மேடை அதிக அளவிலான பயணிகளை கையாளுகிறது. அரக்கோணம் மார்க்கமாக செல்லும் அனைத்து மின்சார ரயில்கள் மற்றும் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல், சென்னை கடற்கரைக்கு புறப்படும் மின்சார ரயில்கள் இந்த நடை மேடையில் இருந்துதான் புறப்படுகிறது.

தற்போது திருவள்ளூர் ரயில் நிலையத்தில் பயணிகள் பயன்பாட்டுக்காக இதுவரை சுரங்கப்பாதை திறக்கப்படவில்லை. இந்த சுரங்கப்பாதை அனைத்து வசதிகளுடன் வழங்குவதற்கு முன் மழைநீர் கசிவு சரி செய்யப்பட வேண்டும். சுரங்கப்பாதையில் நல்ல விளக்குவசதி, அவசர கால மின்விளக்கு வசதி, பொது அறிவிப்பு அமைப்பு என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படவேண்டும். எலக்ட்ரானிக் பிளாட்பார்ம் திசைக் குறிகாட்டிகள், கிரானைட் கல்லால் சுத்தமான தரைகள், அழகான ஓவியம் வரைந்த சுவர்கள், ரயில் வருகை மற்றும் புறப்பாடு எல்இடி டிஸ்ப்ளே போர்டுகள், குப்பை தொட்டிகள், வழுக்காத டைல்ஸ் போன்றவை வேண்டும்.

தற்போது இங்கு ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே நல்ல நிலையில் இயங்கி வருகிறது. எனவே பிளாட்பார்ம் 6ல் மணவாளநகர் பக்கம் அருகிலும், திருவள்ளூர் பக்கம் - சுரங்கப்பாதை நுழைவுவாயில் அருகிலும் பயணிகளின் வசதிக்காக புதிய கழிப்பறைகள் கட்டப்பட வேண்டும். மத்திய அரசு அறிவித்த அம்ரித் பாரத் நிலைய மறுவடிவமைப்பு திட்டத்தின் கீழ் இதுபோன்ற அடிப்படை வசதிகளை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.

Related Stories: