ஸ்டார்க் வேகத்தில் சரிந்தது இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி. வெற்றி

விசாகப்பட்டினம்: இந்திய அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஒய்எஸ்ஆர் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசியது. அந்த அணியில் இங்லிஸ், மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக எல்லிஸ், அலெக்ஸ் கேரி இடம் பெற்றனர். இந்திய அணியில் ரோகித் ஷர்மா தலைமை பொறுப்பேற்க, அவருக்கு இடம் கொடுக்கும் வகையில் இஷான் கிஷன் நீக்கப்பட்டார். ஷர்துல் தாகூருக்கு பதிலாக அக்சர் படேலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ரோகித், கில் இருவரும் இந்திய இன்னிங்சை தொடங்கினர். கில் ரன் ஏதும் எடுக்காமல் ஸ்டார்க் வேகத்தில் லாபுஷேன் வசம் பிடிபட்டார். அடுத்து ரோகித்துடன் கோஹ்லி இணைந்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 29 ரன் சேர்த்தனர்.

ரோகித் 13 ரன் எடுத்து ஸ்டார்க் பந்துவீச்சில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய சூரியகுமார், சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

கே.எல்.ராகுல் 9, ஹர்திக் 1 ரன்னில் பெவிலியன் திரும்ப, இந்தியா 9.2 ஓவரில் 49 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், கோஹ்லி - ஜடேஜா இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடினர்.

கோஹ்லி 31 ரன் (35 பந்து, 4 பவுண்டரி), ஜடேஜா 16 ரன் எடுத்து எல்லிஸ் வேகத்தில் விக்கெட்டை பறிகொடுக்க, ஆட்டம் முழுமையாக ஆஸி. கட்டுப்பாட்டுக்குள் சென்றது. அக்சர் படேல் ஒரு முனையில் கடுமையாகப் போராட... குல்தீப் (4), ஷமி (0), சிராஜ் (0) அணிவகுப்பை நிறைவு செய்தனர். இந்தியா 26 ஓவரிலேயே 117 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அக்சர் 29 ரன்னுடன் (29 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியப் பந்துவீச்சில் ஸ்டார்க் 8 ஓவரில் 1 மெய்டன் உள்பட 53 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். அபாட் 3, எல்லிஸ் 2 விக்கெட் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 118 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸி. களமிறங்கியது.

டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் இருவரும் துரத்தலை தொடங்கினர். இந்திய பேட்ஸ்மேன்கள் தடவித் தடவி ஆடிய ஆடுகளத்தில், ஆஸி. தொடக்க ஜோடி டி20 போல அதிரடியாக விளையாடி பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்டு மிரட்டியது. இதனால் ஸ்தம்பித்துப்போன இந்திய பவுலர்கள் செய்வதறியாது திகைத்தனர். ஆஸ்திரேலியா 11 ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 121 ரன் எடுத்து (ரன் ரேட் 11.00) 10 விக்கெட் வித்தியாசத்தில் மிக எளிதாக வென்று பதிலடி கொடுத்தது. டிராவிஸ் ஹெட் 51 ரன் (30 பந்து, 10 பவுண்டரி), மிட்செல் மார்ஷ் 66 ரன்னுடன் (36 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். 5 விக்கெட் கைப்பற்றி அசத்திய ஸ்டார்க் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை மறுநாள் நடக்கிறது.

Related Stories: