கடையம்: அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்திய சம்பவம், கடையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக நான்கு அணிகளாக செயல்பட்டு வருகிறது. இதில் அதிமுக யாருக்கு சொந்தம் என்று எடப்பாடிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. கடந்த ஜூலை 11ம் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்டி இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்று அறிவித்தது. இருப்பினும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணை, ஏப்ரல் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்வதற்காக சமீபத்தில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அதிமுக நிரந்தர பொதுச் செயலாளருக்கான தேர்தல் தேதி யாரும் எதிர்பாராத வகையில் நேற்று முன்தினம் திடீரென அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் 26ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதில் 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய, 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். இதனை கண்டித்து ஓபிஎஸ் அணியின் தென்காசி மாவட்ட பொருளாளர் நூருல் அமீர் தலைமையில் கடையம் அருகே முதலியார்பட்டி ரயில்வே கேட் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, எடப்பாடி உருவம் பொறித்த படத்தை தீயிட்டு எரித்தனர். தொடர்ந்து அவர்கள், எடப்பாடி ஒழிக, நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே என கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.