ஈரோடு அருகே கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி சாலையில் பாலை கொட்டி போராட்டம்-கறவை மாடுகளுடன் மறியல்

ஈரோடு : பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி ஈரோடு அருகே பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன், பாலினை சாலையில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தமிழக அரசு ஆவின் மூலம் பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்யும் ஒரு லிட்டர் பசும் பாலுக்கு ரூ.42ம், எருமைப்பாலுக்கு ரூ.51 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும். ஆவினுக்கு பால் வழங்கும் கறவையினங்களுக்கு ஆவின் செலவில் இலவச காப்பீடு வசதி செய்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10ம் தேதி முதல் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி 17ம் தேதி (நேற்று) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். தமிழக பால் வளத்துறை அமைச்சர் நாசர் தலைமையில் நேற்று முன்தினம் பால் உற்பத்தியாளர்களிடம் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், பால் உற்பத்தியாளர்கள் மாநிலம் முழுவதும் பால் உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் நசியனூர் ராயபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் முன் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில பொருளாளர் ராமசாமி தலைமையில் பால் உற்பத்தியாளர்கள் தங்களது கறவை மாடுகளுடன் திரண்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கேனில் கொண்டு வந்த பாலினை சாலையில் கொட்டி தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பால் உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கலைந்து போக செய்தனர்.

Related Stories: