ஸ்மைல் ப்ளீஸ்...பற்களைப் பாதுகாப்போம்!

நன்றி குங்குமம் டாக்டர்

நமது முகத்துக்கு அழகு சேர்ப்பது புன்னகை என்றால் அந்தப் புன்னகைக்கு அழகு சேர்ப்பது ஆரோக்கியமான, சீரான பல்வரிசைதான். பற்கள் நம் தாடையை வலுவாக்கி முகத்துக்கு அழகைக் கொண்டு வருவதோடு, உண்ணும் உணவை உடல் செரிப்பதற்கான செரிமானத்தின் தலைமகனாகவும் இருக்கிறது. நம் மொத்த உடலும் உணவைச் சார்ந்திருக்கிறது என்றால் உணவோ உடலின் சக்தியாய் மாற வேண்டிய செரிமான செயல்பாட்டை சார்ந்திருக்கிறது. இந்த செரிமான மண்டலம் எனும் பெருந்தொகுப்பில் வாய்தான் தலைவாசல். அதில் பற்கள்தான் கோட்டைச் சுவர், நாவுதான் வாயிற்காப்போன்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பற்களைப் பராமரிப்பதைப் பற்றி நம்மிடையே இன்னமும் போதுமான விழிப்புணர்வு இல்லை என்பதுதான் எதார்த்தம். நம் நாட்டில் இரண்டில் ஒருவருக்கு ஏதேனும் ஒருவகை பல் பாதிப்பு இருக்கிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம். மறுபுறம் சின்னக் குழந்தைகள்கூட பற் சொத்தை, பற்குழி என அவதிப்படுவதைப் பார்க்கிறோம். பற்களையும் வாயையும் ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி என்று ஒரு ஹெல்த்தி டூர் போகலாம் வாங்க…

பற்கள் இருவகைப்படும் என்பதை நாம் பள்ளியிலேயே படித்திருப்போம். முதலில் குழந்தை பிறந்து ஆறு மாதங்களிலிருந்து மூன்று வயதுக்குள்ளாக பால் பற்கள் முளைக்கின்றன. அவை மொத்தம் இருபது இருக்கும். மேல் தாடையிலும் கீழ்த் தாடையில் தலா பத்து பற்கள் இருக்கும். ஆறு வயதில் மழலைப் பருவம் முடிந்தபின், பால் பற்கள் விழுந்து, நிரந்தரப் பற்கள் முளைக்கத் தொடங்கும். இவை மொத்தம் முப்பத்திரண்டு இருக்கும்.  சராசரியாக நமக்கு ஆறு வயது முதல் பதினெட்டு வயது வரை இந்தப் பற்கள் முளைக்கின்றன.

அடிப்படையில் பற்கள் மூன்று பாகங்களால் ஆனது. வெளிப்புறம் எனாமல் (Outer hard structure).  எனாமல் கூர்மைத்தன்மையால் ஆனது. உணவை நன்கு கடித்து மெல்ல உதவுகிறது. எனாமல் என்பது கால்சியம் மற்றும் பாஸ்பேட் (Phosphate) போன்ற தாதுஉப்புகளால் ஆனது. இதில் ஹைட்ராக்சிஅப்பிடைட் கிரிஸ்டல் (Hydroxyapetite crystal) எனப்படும் தாது உப்பும் நிறைந்துள்ளது. எனாமலானது அமிலோஜெனின் (Amelogenin) அமிலோபிளாஸ்டின் (Ameloblastein) மற்றும் எனாமுலின் (Enamulin) என்ற புரதங்களாலும் ஆனது.

பற்களில் கால்சியம் அதிகபடியாகக் காணப்படுகிறது. எனாமலில் கிரிஸ்டலைட்  உருவாகும்போது ஃப்ளோரைடு எனும் வேதிப்பொருள் படிகிறது. பற்கள் பராமரிப்பில் ஃப்ளோரைடு இன்றியமையாதது. அதனால்தான், நாம் தினமும் உபயோகிக்கும் பற்பசையில் ஃப்ளோரைடு கலந்துள்ளதா என்று அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஃப்ளோரைடு தான் நம் பற்களை பற்சிதைவிலிருந்து பாதுகாக்கிறது. ஒருவருக்குப் பற்சிதைவு இருந்தால் டாபிக்கல் ஃப்ளோரைடு அப்ளிகேஷன் (Topical fluoride application) எனப்படும் ஃப்ளோரைடு பசையை பற்களில் படியச் செய்வதன் மூலம் பற்சிதைவைத் தடுக்க வேண்டும். அதே சமயம் பற்களில் அதிகப்படியான ஃப்ளோரைடு படிவதும் நல்லதல்ல. இப்படிப் படிவதால் ஃப்ளோரோசிஸ் என்ற பிரச்சனை உருவாகும். எனவே, பற்களில் ஃப்ளோரைடை சரியாகப் பராமரிக்க வேண்டியது அவசியம்.

பற்களில் மக்னீசியம், சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாது உப்புக்களும் கணிசமாக உள்ளன. இவை ஒவ்வொன்றுமே பற்களை ஆரோக்கியமாகப் பராமரிக்க அத்தியாவசியம்.பற்களின் எனாமலில் பல காரணங்களால் குறைபாடுகள் உருவாகின்றன. காய்ச்சல், பற்களில் அடிபடுதல், நோய்த்தொற்று, டெட்ராசைக்ளின் (Tetracycline) என்ற மருந்தை எடுத்துக்கொள்வது மரபணு குறைபாடுகள், குறைந்த எடையோடு குழந்தை பிறப்பது போன்ற பலவித காரணங்களால் எனாமல் குறைபாடுகள் உருவாகக்கூடும்.

இந்த, எனாமலுக்கு கீழ் டென்ட்டின் (Dentin) என்ற பாகம் அமைந்துள்ளது. இதன் நிறம் லேசான மஞ்சள். எனாமல் போல் கடினமாக இல்லாமல் சற்று மென்மையானது இது. கொலோஜன் ஃபிப்ரில்ஸ் (Collagen fibrils) மற்றும் ம்யூகோபாலிசாச்சரைட்ஸ் (Mucopolysacharides) என்ற வேதிப்பொருட்களைக் கொண்டது.

மேலும், கால்சியம் மற்றும் பாஸ்பேட் கொண்ட ஹைட்ரோக்சில்அபிடைட் கிரிஸ்டலும் இந்த டென்டினில் உள்ளது. டென்டினை தொடக்க நிலை டென்ட்டின் (Primary) இரண்டாம் நிலை டென்டின் (Secondary) டெஸ்டினரி டென்டின் (Testinary) dentin என்ற மூன்று அடுக்குகள் உள்ளன. டென்டினும் எனாமலும் சந்திக்கும் இடம் டெண்டோ எனாமல் சந்திப்பு (Dentinoenamel Junction) எனப்படுகிறது.

டென்ட்டின் என்பது தொடர்ந்து வளரும் தன்மை கொண்டது. பற்களில் எனாமல் தேய்ந்து டென்ட்டின் வெளியே தெரியும்போது ஒரு கூர்மையான வலி பற்களில் ஏற்படுவதை உணரலாம். டீசென்சிடைசிங் ஏஜென்ட்ஸ் எனப்படும் பற்கூச்சத்தை நீக்கும் பற்பசைகளைப் பயன்படுத்துவதால் இந்தப் பிரச்சனையை சீராக்கலாம். எனாமலையும் டென்ன்டினையும் கடந்து பல்ப் எனப்படும் மென்மையான பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியை டென்ட்டின், எனாமல் மற்றும் செனண்டம் எனப்படும் பகுதியும் சூழ்ந்துள்ளது.

பல்ப் எனப்படுவது ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள் கொண்ட பகுதி. இது கொலோஜன் நார் (Collagen fibre) மற்றும் மாஸ்டோக்ளைகான்ஸ் (Masteoglycans) ஆகியவற்றாலானது. பல்ப்பில் பெரும்பாலும் 50 சதவீதத்துக்கு மேல் கால்சிஃபைடு பல்ப்ஸ்டோன்ஸ் எனப்படும் நுண்துகள்கள் காணப்படுகின்றன. (Calcified pulpstones) காணப்படும். இந்த பல்ப்புகள் பற்களுக்கு மிக இன்றியமையாதவை. இவை பல்வேறு சூழ்நிலைகளில் பற்களுக்குப் பாதிப்பு ஏற்படும்போது டெண்டினை சீராக்க முயலும் (Reparative Dentin) என்ற நடவடிக்கை மூலம் பற்களைக் காக்கின்றன. பல்ப் அமைந்துள்ள பற்குழியானது பல்லின் வேர்வரை ரூட் கேனலாக நீண்டு செல்கிறது. இந்த பல்ப் பல்லின் மேல் பகுதி (Conoal pulp) மற்றும் வேர்ப்பகுதி (Nadicular pulp) என இரண்டு பாகங்களாக அமைந்துள்ளன.

பற்களைப் போலவே வாயில் மிக முக்கியமான அமைப்பு ஈறுகள். பற்களைச் சுற்றிலும் பாதுகாப்பு அரணாக அமைந்திருக்கும் இவைதான் பற்களைக் காக்கின்றன. பற்களின் நலன் ஈறுகளின் ஆரோக்கியத்தைப் பொருத்தே அமைகிறது.ஈறுகளே பற்களை கிருமிகளிலிருந்து பாதுகாக்கின்றன. பல் மருத்துவத்தில் செயற்கைப் பல் கட்டுதல் போன்ற (Dental implants ridge augncentation procedures) சிகிச்சைகளுக்கு ஆரோக்கியமான ஈறுகளின் ஒத்துழைப்பு அவசியம்.

பற்களை பராமரிப்பது மிகவும் அவசியம். காலை, இரவு என இருமுறை பல் துலக்குதல் ஒவ்வொரு உணவு உட்கொண்ட பின் நன்கு வாய் கொப்பளித்தல் போன்ற பழக்கங்களால் பற்சிதைவுகளையும், ஈறு பிரச்சனைகளையும் தவிர்க்க முடியும். மிக மென்மையான ஃப்ரஷ்களை மட்டுமே பயன்படுத்துதல் வேண்டும். மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்வதும் அவசியம்.

இன்று அனைத்து விதமான பல் மற்றும் ஈறு பிரச்சனைகளுக்கு நவீன மருத்துவத்தில் தீர்வு உண்டு. பல்வலி என்றவுடன் பற்களை அகற்றுவது என்ற நிலையிலிருந்து பல் மருத்துவமும் பொது மருத்துவத்தைப் போலவே மிகவும் முன்னேறியிருக்கிறது. சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தொகுப்பு: லயா

Related Stories: