மாமல்லபுரம் புராதன சின்னம் முன்பு தமிழில் பெயர் பலகை: சுற்றுலா பயணிகள் வரவேற்பு

சென்னை: மாமல்லபுரம் புராதன பகுதிகளில், தமிழ் எழுத்துகளில் மரத்திலான பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. உலகின் புராதன சுற்றுலாத் தலங்களில் மிகவும் புகழ்பெற்ற மாமல்லபுரத்தில், கடந்த 7ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களின் காலத்தில் வெண்ணெய் உருண்டை பாறை, அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்ட பல்வேறு புராதன சின்னங்கள் அழகுற செதுக்கப்பட்டு உள்ளன. இதில், பஞ்சபாண்டவர் ரதங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

இவை ஒவ்வொன்றும் மகாபாரதத்தின் முதன்மைப் பாத்திரங்களான தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன்-சகாதேவன், திரவுபதி ஆகியோரின் பெயரிலேயே குறிப்பிடப்படுகின்றன. ஆனால், அவை என்னென்ன பெயரிலான ரதங்கள் என்பதை அறிய முடியாமல் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெரிதும் குழம்பி வருகின்றனர். இதுகுறித்து புராதன சின்னங்களை நிர்வகித்து வரும் மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார்கள் சென்றன.  

இந்நிலையில், நேற்று மாமல்லபுரத்தில் உள்ள ஐந்து ரத சிற்பங்கள் உள்பட அனைத்து புராதன சின்னங்களின் முன்பகுதியில், அந்தந்த சிற்பங்களின் முன்பகுதியில் தமிழ் எழுத்துக்கள் பொறித்த மரத்திலான பெயர் பலகைகளை மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் அமைத்துள்ளனர். இதனால் அங்கு வந்திருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள், தொல்லியல் துறை அதிகாரிகளின் நடவடிக்கைக்கு வரவேற்றனர். அங்கு வெளிநாட்டு பயணிகள், அந்த சின்னங்களின் முன்பிருந்த தமிழ் எழுத்துகளை எழுத்து கூட்டி படித்து, தன்னுடன் வந்த தமிழ் தெரிந்தவர்களிடம் விளக்கம் கேட்டு மகிழ்ந்தனர்.

Related Stories: