அரசு ஆசிரியர்கள், ஊழியர்களை தேர்தல் பணிக்கு ஈடுபடுத்தவில்லை-பாஜக மாவட்ட பொறுப்பாளர் குற்றச்சாட்டு

சித்தூர் : எம்எல்சி தேர்தலுக்கு அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் தேர்தல் பணிக்கு ஈடுபடுத்தவில்லை என பாஜக மாவட்ட பொறுப்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

சித்தூர் பாஜக மாவட்ட பொறுப்பாளர் கோலா ஆனந்த், சித்தூர் கண்ணன் அரசு பள்ளியில் எம்எல்சி தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெறும் மையத்தை ஆய்வு செய்தார். பின்னர் அவர் பேசியதாவது:

 ஆளும் கட்சி அரசு எம்எல்சி தேர்தலில் பல்வேறு மோசடியில் ஈடுபட்டு வருகிறது. முதல்வர் ஜெகன்மோகன் கவுரவமாக நடத்த வேண்டிய எம்எல்சி தேர்தலை அராஜகமும், மோசடியும் செய்து வருகிறார்.பட்டதாரிகள் வாக்களிக்கும் எம்எல்சி வாக்காளர் பட்டியலில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு படித்த நபர்களுக்கு போலி ஆவணங்கள் தயார் செய்து மோசடியில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் பணிகளில் அரசு ஆசிரியர்கள் அல்லது அரசு ஊழியர்கள், அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்த வேண்டும். ஆனால், முதல்வர் ஜெகன் மோகன் வார்டு செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்களை தேர்தல் பணிக்காக பயன்படுத்தி உள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையம் வார்டு செயலகத்தின் ஊழியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என தெரிவித்தும் அவர் வார்டு செயலக ஊழியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தி உள்ளார். ஏனென்றால் அரசு ஊழியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தினால் கள்ள ஓட்டுகள் போட முடியாது. அரசு ஆசிரியர்களுக்கு 20ம் தேதி என்றாலும் சம்பளம் வழங்கப்படுவதில்லை. அது மட்டுமல்லாமல் அரசு ஆசிரியர்களின் பிஎப் நிதி பல்வேறு நல திட்டங்களுக்கு பயன்படுத்தி விட்டார்.

இதனால் அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் ஜெகன்மோகன்  மீது கடும் கோபத்தில் உள்ளார்கள். சித்தூர் மாவட்டம் முழுவதும் அனைத்து வாக்குப்பதிவு மையங்களில் ஆய்வு செய்து வருகிறேன். அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் பட்டியலில் போலி வாக்காளர்கள் உள்ளார்கள். பாஜக பூத் ஏஜென்ட்கள் கண்டறிந்து அவர்கள் பட்டதாரிகள் இல்லை என ஏராளமானோரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி வைத்துள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.இதில், பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் சிட்டிபாபு, நகர தலைவர் ராம் பத்ரா, செயலாளர் சண்முகம்  உள்பட ஏராளமான பாஜகவினர் உடன் இருந்தனர்.

Related Stories: