திருமண ஆசை வார்த்தை கூறி மலேசிய பெண்ணிடம் ரூ.40 லட்சம் மோசடி: புதுகை வாலிபர் உட்பட 4 பேர் மீது வழக்கு

விராலிமலை: திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மலேசியா பெண்ணிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்த புதுகை வாலிபர் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூரை சேர்ந்தவர் பொன்.மணிகண்டன் (30). மலேசியாவில் சிவில் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். அப்போது சிங்கப்பூர் சூப்பர் மார்க்கெட்டில் சூப்பர்வைசராக இருந்த மலேசியாவை சேர்ந்த  மகேஸ்வரி (40) என்பவருடன் 5 வருடமாக நெருங்கி பழகியுள்ளார். இந்தியா அழைத்து சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியதோடு அவரிடம் இருந்து ரூ.40 லட்சம் ரொக்கம், 20 பவுன் நகை, ரூ.2 லட்சம் மதிப்பிலான பழைய கார், ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள புதிய ஐ போன் பெற்றுள்ளார்.

இந்நிலையில், கடந்த 4 வருடங்களுக்கு முன் கொரோனா பரவல் நேரத்தில் இந்தியா வந்த பொன்.மணிகண்டன், மீண்டும் மலேசியா செல்லாமல் இங்கேயே இருந்துள்ளார்.  இதையடுத்து இரண்டு முறை இந்தியா வந்த மகேஸ்வரி, பொன்.மணிகண்டன் வீட்டில் தங்கியதாக கூறப்படுகிறது. அப்போது அவரது குடும்பத்தினரும் இருவருக்கும்  திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். இதையடுத்து மலேசியா சென்ற மகேஸ்வரியிடம், அவ்வப்போது செல்போன் மூலம் பேசி வந்த மணிகண்டன் பின்னர் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதையடுத்து கடந்த 20 நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை வந்த மகேஸ்வரி, பொன்.மணிகண்டனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி உள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து அவரும்குடும்பத்தாரும் மகேஸ்வரியை மிரட்டியுள்ளனர். இதுதொடர்பாக மகேஸ்வரி, அன்னவாசல் போலீசில் நேற்றுமுன்தினம் புகார் கொடுத்தார்.   போலீசார் பொன்.மணிகண்டன், தாய் ரஜினி, தந்தை வாசு, சகோதரி பிரியா, சகோதரன் ரஞ்சித் குமார் ஆகிய 5 பேர் மீது  வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: