வடமாநில தொழிலாளி குறித்து பொய் செய்தி பீகார் நாளிதழ் மீது நடவடிக்கை: திருப்பூர் போலீஸ் அறிக்கை

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட போலீஸ் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பீகாரின் பிரபல நாளிதழில் மதுபானியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தியை ஆய்வு செய்தபோது மதுபானியை சேர்ந்த சம்பு முகையா என்ற இளைஞர்,  திருப்பூர் மங்கலம் பகுதியில் வேலை பார்த்து வந்ததும், அவர் தமிழக பெண்ணை திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

மேலும், சம்பு முகையாவின் தங்கையின் திருமணம் நின்றுவிட்டதால் அவர் வருத்தத்தில் இருந்தாகவும், அவர் கடந்த மார்ச் 5ம் தேதி தனது வீட்டின் குளியலறைக்கு அருகில் கை நரம்பை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்துகொண்டதும், சம்பு முகையாவின் சடலத்தை அவரது மனைவி சரண்யா முதலில் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததும் தெரியவந்தது. ஆனால், பீகார் பிரபல நாளிதழில், சம்பு முகையா திருப்பூரில் மீன் வாங்கும்போது ஆயுதத்தால் தாக்கப்பட்டதாலேயே கொல்லப்பட்டதாக செய்தியில் கூறப்பட்டிருப்பது முற்றிலும் தவறானது.

சம்பு முகையாவின் சடலம் அவரது வீட்டின் குளியலறைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது. அவரது கைநரம்பு அறுக்கப்பட்டிருந்தது. எனவே பொய்யான செய்தியை பரப்பிய நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: