சிபிஐயை தொடர்ந்து அமலாக்கத்துறையால் மணீஷ் சிசோடியா அதிரடி கைது: நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டம்..!

டெல்லி: டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். டெல்லி மதுபானக்கொள்கை முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சிபிஐ அதிகாரிகள் கலால் துறை அதிகாரிகள் மற்றும் தொழிலதிபா்கள் சிலரை கைது செய்தது. இதன் தொடர்ச்சியாக, கலால் துறை அமைச்சராக இருந்த துணை முதல்வர் சிசோடியாவின் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில்  சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன்பின் சிசோடியாவை விசாரணைக்காக இரண்டு முறை வரவழைத்தனர்.

இரண்டாவது முறையாக கடந்த மாதம்  26ம் தேதியன்று விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான சிசோடியாவை அன்று இரவு கைது செய்தனர். அதன்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 7 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ காவல் கடந்த 6ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அவரை அதிகாரிகள் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம் கே நாக்பால் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது மேற்கொண்டு சிபிஐ காவலை அதிகாரிகள் கோராததால் மார்ச் 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணிஷ் சிசோடியாவிடம், அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து மணீஷ் சிசோடியாவை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்தது. விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை என்று அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. தற்போது சிறையில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ள மணீஷ் சிசோடியாவை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார் என எதிர்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருப்பது பல்வேறு கேள்விகளுக்கு வழி வகுத்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி, பிரதமர் மோடிக்கு எதிர்கட்சிகளை சேர்ந்த 8 தலைவர்கள் ஏற்கனவே, கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: