திருச்சுழி: திருச்சுழி பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களிலும் அமைக்கப்பட்டுள்ள நூலகங்களை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முழுமையாகச் செயல்படுத்தப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிராம ஊராட்சிகளுக்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் சுமார் ரூ.3 லட்சம் செலவில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகம் கட்டப்பட்டது. இந்நூலகத்துக்கு விலை உயர்ந்த புத்தகங்கள் மற்றும் தேவையான மேஜை நாற்காலிகளை அரசு வழங்குகிறது. மேலும், இந்நூலகங்களுக்கு மாதம் ரூ.750 சம்பளத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களைத் தேர்வு செய்து பொறுப்பாளர்களாக நியமிக்க அரசு அனுமதி அளித்திருந்தது.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் 40 ஊராட்சிகள் அமைந்துள்ளன. இதில் திருச்சுழி பகுதியில் உள்ள திருச்சுழி, பள்ளிமடம், மீனாட்சிபுரம், கல்லுப்பட்டி, சுத்தமடம், பண்ணைமூன்றடைப்பு உள்பட சுமார் 30க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட நிதியின் கீழ் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவைகளில் பெரும்பாலான நூலகங்கள் திறக்கப்படுவதில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.திறக்கப்பட்டுள்ள நூலகங்கள் சிலவற்றுக்கு நூலக பொறுப்பாளர் யாரும் நியமிக்கப்படவில்லை. மேலும் ரூ.1,500 சம்பளத்திற்கு நூலகங்களை நிர்வகிக்க ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் யாரும் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக பெரும்பாலான நூலகங்கள் திறக்கப்படாமலே உள்ளன.ஏற்கனவே பொது நூலகத் துறை மூலம் ஊர்ப்புற நூலகங்கள் உள்ள கிராமங்களில், அண்ணா மறுமலர்ச்சி திட்ட நிதியிலும் நூலகம் கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருச்சுழியில் பொது நூலகம், அண்ணா மறுமலர்ச்சி திட்ட நிதியின் கீழ் நூலகம் என இரண்டு நூலகங்கள் அமைந்துள்ளன. இதே போன்று தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தொடங்கப்பட்ட அய்யன் திருவள்ளுவர் நூலகம் 5 ஆண்டுகளுக்குள் இருந்த சுவடே தெரியாமல் மறைந்து போனதாக ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கூறுகின்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர் பாண்டியன் கூறுகையில், கடந்த 2006ம் ஆண்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில் தலா ரூ.3.25 லட்சம் செலவில் நூலக கட்டிடங்கள் கட்டப்பட்டன. பல லட்சம் ரூபாய் செலவில் 40க்கும் மேற்பட்ட பதிப்பகங்களைச் சேர்ந்த புத்தகங்கள் வாங்கப்பட்டன. காலப்போக்கில் நூலகங்கள் உரிய பராமரிப்பின்றி, எந்நேரமும் பூட்டியே கிடந்தன. இதனால், கிராமப்புற மாணவர்கள், கல்வியாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். மேலும், பல கோடி ரூபாய் செலவில் வாங்கிய விலை மதிப்பற்ற புத்தகங்கள் பயன்பாடின்றி வீணாகியுள்ளன. நூலக பராமரிப்பாளர்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்பட்டது. பல ஊராட்சிகளில் முறையாக வழங்காததால் யாரும் பராமரிப்பு செய்ய முன்வரவில்லை. ஆனால், மாதா மாதம் அந்த தொகை வழங்கப்படுவதாக ஊராட்சிகளில் கணக்கு காட்டப்படுகிறது.கிராமப்புற மாணவர்கள் அறிவை வளர்க்க ஏதுவாக கிராமங்களில் செயல்படும் ஊரக, கிளை நூலகங்களுடன், அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்களை இணைத்து, கிராமப்புற நூலகங்களை பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பெயரளவுக்கு மட்டும் செயல்படும் கிராமப்புற நூலகங்கள் முழுமையான அளவில் செயல்பட்டால் அங்குள்ள மக்கள் பயனடைவார்கள் என்றார்.திருச்சுழி ரமேஷ் கூறுகையில், திருச்சுழி பகுதியில் கட்டப்பட்டுள்ள நூலகம் இதுநாள் வரையிலும் வீணாகவே உள்ளது. படித்த இளைஞர்கள், மாணவர்கள் பொழுது போக்காகவும், அறிவை வளர்க்கவும் நூலகத்திற்கு செல்லலாம் என நினைத்தால், அது எப்போதும் பூட்டியே கிடக்கிறது. பயன்பாடில்லாமல் இந்தக் கட்டடம் வீணாகி விட வாய்ப்புள்ளது. பல ஊர்களில் இதே நிலை தான் விரைவில் நூலகங்கள் செயல்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டுமென கூறினார்.நூலகத்துறையை சேர்ந்த அலுவலர் ஒருவர் கூறுகையில், கிராம ஊராட்சிகள் சார்பில் நடத்த முடியாத நூலகங்களை எங்களிடம் ஒப்படைத்தால் நாங்கள் நடத்திக் கொள்கிறோம் என கூறினாலும் எங்களிடம் ஒப்படைக்க முன்வருவதில்லை. அவர்களும் சரிவர பராமரிப்பது இல்லை என்றார். விரைவில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களிலும் அமைக்கப்பட்டுள்ள நூலகங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.