×

டோஸ்டர்லிமாப் புற்றுநோய் சிகிச்சையின் புதிய மந்திரக்கோலா?

நன்றி குங்குமம் டாக்டர்

புற்றுநோய் ஆராய்ச்சியாளர்  கலிஃபோர்னியா அருள்ஜோதி முரளிதரன்

இன்றைய நாளில் மனித இனத்தையே அச்சுறுத்தும் ஒரு கொடிய அரக்கன், புற்றுநோய். உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரங்களின்படி 2020 ஆம் ஆண்டில் உலகெங்கிலும் 10 மில்லியன் பேர் இந்நோயினால் இறந்துள்ளனர். கிட்டத்தட்ட  ஆறு இறப்புகளில் ஒன்றுக்கு  புற்றுநோய் காரணமாக இருந்துள்ளது.  புற்றுநோய் ஒரு கொடுமை என்றால், வழக்கத்திலுள்ள சிகிச்சை முறைகளான, மருந்துசிகிச்சை (கீமோதெரபி- Chemotherapy) கதிர்வீச்சுச் சிகிச்சை (ரேடியேசன்-Radiation treatment) போன்றவையும் வலிமிகுந்தவையே.

மேற்கண்ட சிகிச்சை முறைகள் உடலின் எதிர்ப்பாற்றல் அமைப்பை வலுவிழக்கச்செய்யும் வகையில் பின்விளைவு களைக் கொண்டிருப்பதால் (பிற்பாடு மீளப்பெற்றாலும்) இச்சிகிச்சைகள் குறித்த அச்ச உணர்வே மக்களிடம் அதிகம். புற்று நோய்க்கு முறையான சிகிச்சை குறித்த ஆராய்ச்சிகள் உலகெங்கும் நடந்துவரும் வேளையில், இந்நோய்க்குக் கொடுக்கப்பட்டு வரும் சிகிச்சைகளில் விஞ்ஞானிகள் அதிக பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத சிகிச்சை முறைகளை நோக்கி நகர்ந்துவருகின்றனர். அவற்றில் முக்கியமானது, சமீபகாலமாக புற்றுநோய் சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்திவரும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி புற்றுநோய் செல்களை அழிக்கச்செய்கிற “இம்யூனோதெரபி’ (நோயெதிர்ப்பு சிகிச்சை) எனும் சிகிச்சைமுறை.

கடந்த சில தசாப்தங்களாக நோய் எதிர்ப்பு சிகிச்சை வேகமாக வளர்ந்து வரும் சூழலில் இருவாரங்களுக்கு முன்பு ‘நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில்’ (NEJM) வெளிவந்த டோஸ்டர்லிமாப் (Dostarlimab) என்ற இம்யூனோதெரபி வகை மருந்து குறித்த ஆய்வுக் கட்டுரை மருத்துவ உலகிலும், மக்களிடையேயும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  இதுவரை 100 சதவீதம் புற்றுநோயைக் குணப்படுத்தக்கூடிய மருந்து கண்டறியப்படவில்லை என்ற வகையில், புற்றுநோய் சிகிச்சை வரலாற்றில் அரிய மருந்தாக ‘டோஸ்டர்லிமாப்’ கொண்டாடப்படுகிறது.

நம் குடும்பத்தில் ஒருவரையோ அல்லது நமக்கு தெரிந்த ஒருவரையோ இந்தக் கொடிய நோய்க்கு பலிகொடுத்துக்கொண்டிருக்கும் சூழலில் இந்தச் செய்தி உலகெங்கிலும் பெரிய எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் ஒருங்கே கொடுத்திருக்கிறது. பொதுவாக இந்தவகை (இம்யூனோதெரபி) மருந்துகள் புற்றுநோயை எதிர்த்து எவ்விதம் செயலாற்றுகின்றன என்பதை தெரிந்துகொண்டபின் இந்த மருந்து குறித்து விரிவாக அலசுவோம்.

ஆரோக்கியமான நோய்எதிர்ப்பு அமைப்பானது மிகவும் சிக்கலானதும் அதே நேரம் நம் உடலின் பகுதியல்லாத (Foreign Bodies) கிருமிகள், வைரஸ்கள், ஒட்டுண்ணிகள் போன்ற பொருட்களை ஆன்டிஜென்கள் என்று ஒருவகைப் புரதமாக வகைப்படுத்தி அவற்றுடன் இணைந்து அழிக்கக்கூடிய சாதுர்யமானதுமாகும்.

பல்வேறு விதமான நோய்களையும், கிருமிகளையும் எதிர்த்துப் போராடும் நம் ‘நோயெதிர்ப்பு மண்டலம்’ புற்றுநோய் செல்களிடம் மட்டும் தோற்றுப்போகிறது. உடலின் நோய் எதிர்ப்பு செயல்பாட்டில் இருந்து நழுவும் திறனை புற்றுநோய் செல்கள் பெற்றிருப்பதே இதற்கு முக்கியக் காரணம். புற்றுநோய் செல்கள், உடலின் பிற சாதாரண செல்களைப் போலவே சில அடையாளங்களைக் கொண்டுள்ளதுடன், வெவ்வேறு சூழலுக்குத் தக்கவாறு தகவல் பரிமாற்ற மூலக்கூறுகளை உருவாக்கி நோய் எதிர்ப்புச் செல்களுக்கு (T செல்கள்) எதிராக ஒரு தந்திரமான தடுப்பை உருவாக்கிக்கொள்கிறது.

இதனால், நோய் எதிர்ப்பாற்றல் செல்களால், சாதாரண செல்களில் இருந்து இந்தப் புற்றுச் செல்களை வேறுபடுத்தி அறிந்து, எதிர்வினை புரிய முடிவதில்லை. அதாவது, ரத்த வெள்ளை அணுக்களில் காணப்படும் T-செல்களே புற்றுநோய் செல்களை அழிக்கக் காரணமான உயிரணுக்கள். T செல்கள் PD1 என்ற ஏற்பியைக் (receptor) கேடயமாகக்கொண்டு எப்போதும் போர் புரியத் தயார் நிலையிலேயே இருக்கின்றன, ஆனால் புற்றுநோய் செல்களோ, அவற்றின் வெளிப்புறத்தில் இருக்கும் புரதத்தை (ஆன்டிஜென்) T-செல்களால் அடையாளம் காண முடியாதவாறு PDL-1 என்ற புரதத்தைத் தடுப்பாக உருவாக்கி வெள்ளையணுக்களை குழப்பி, நானும் இந்த உடலின் சாதாரண செல்தான் என்னை எதிர்த்துப் போர் புரியாதீர் என்ற செய்தியைத் தருகிறது. இந்தச் செய்தியினால் T-செல்லானது, புற்றுநோய் செல்களுடன் இணைவது (PD1-PDL1) மட்டுமல்லாமல் எதிர்ப்பாற்றலும் தடுக்கப்படுகிறது.

இம்யூனோதெரபி மூலம், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு எதிரான தடைகளைத் தகர்த்து, பாக்டீரியா அல்லது வைரஸ் தாக்குதலுக்கு எதிரான செயல்பாட்டைப் போலவே, புற்றுநோய் செல்களுக்கு எதிராகவும் இயங்க வைப்பதுதான் இந்த சிகிச்சையின் நோக்கம். 2018 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு புற்றுநோய்க்கு எதிரான இம்யூனோதெரபியின் இந்தச் செயல்பாட்டைக் கண்டறிந்ததற்காக, விஞ்ஞானிகளான அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் பி ஆலிஸன் மற்றும் ஜப்பானின் தசுக்கு ஹோன்ஜோ (James P. Allison and Tasuku Honjo)  ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

நேரடியாக புற்றுநோய் செல்களைக் கொல்லாமல், புற்றுநோய் செல்களின் தடுப்புப் புரதங்களை இனம் கண்டு நோய் எதிர்ப்பாற்றல் மண்டலத்தின் பணிகளைத் தூண்டி வினைபுரியும் செக்பாயின்ட் இன்ஹிபிட்டர்’ (Immune Checkpoint Inhibitor) என்றழைக்கப்படும் மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் (Monoclonal Antibodies) இம்யூனோ தெரபியில் பயன்படுத்தப்படுகின்றன. இம்மருந்துகளின் முக்கிய வேலை PD1-PDL 1 இணைவைத் தடுப்பதுதான்.

பெம்ப்ரோலிஸுமாப் (Pembrolizumab), இபிலிமுபாப் (Ipilimubab), நிவோலுமாப் (Nivolumab) செமிப்ளிமாப் (Cemiplimab), அடிஸோலிஸுமாப் (Atezolizumab), ஏவ்லுமாப் (Aveluumab) மற்றும் டர்வாலுமாப் (Durvalumab) போன்றவை ஏற்கெனவே புழக்கத்திலுள்ள இம்யூனோதெரபி வகை மருந்துகள், தோல், நுரையீரல், இரத்தம், சிறுநீர்ப்பை, சிறுநீரகம் மற்றும் தலை மற்றும் கழுத்து போன்ற பல்வேறு புற்றுநோய்களுக்கு நோயெதிர்ப்புச் சிகிச்சையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வகை மருந்துகளும் குறைந்த பட்ச பக்க விளைவுகளைக் கொண்டுள்ளன (அலர்ஜி, சுவாசப் பிரச்சனை போன்றவை). இச்சிகிச்சை 20 முதல் 30 சதவிகிதம் வரையிலான  நோயாளிகளிடம் மட்டுமே பலனளித்துள்ளது. நோயாளியின் வயது (வயதானவர்களின் நோயெதிர்ப்பு மண்டல பலவீனம்) மற்றும் புற்றுநோய் செல்கள் T செல்கள்களுக்கு எதிரான தடுப்பைக் கொண்டிருப்பதே குறைவான செயல்திறனுக்குக் காரணமாகும்.

பெருங்குடல் புற்றுநோய் உலகளவில் அதிகம் பாதித்துள்ள புற்றுநோய்களில் மூன்றாம் இடத்திலுள்ளது. இதுவரை மலக்குடல் புற்றுநோய்க்கு பல்வேறுவிதமான சிகிச்சைகள் (கீமோ, ரேடியோ) இருந்த போதிலும், அதன் பக்கவிளைவுகள் மிகக் கடுமையானது.  இச்சிகிச்சை முறைகள் அருகிலுள்ள உறுப்புகளான குடல் மற்றும் சிறுநீரகச் செயல்பாடுகளில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பாலியல் ரீதியான செயற்பாடுகளிலும் இச்சிகிச்சைகள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். சிகிச்சைக்குப் பிறகும் மீண்டும் புற்றுநோய் தோன்றலாம் என்பது இதில் வேதனைக்குரிய செய்தி.

அமெரிக்காவின் மன்ஹாட்டனில் உள்ள ஸ்லோன்-கெட்டரிங் நினைவுப் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 12 நோயாளிகளுக்கு மூன்று வாரங்களுக்கு ஒருமுறையென தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்கு “டோஸ்டர்லிமாப்” செலுத்தப்பட்டு ஆய்வு செய்ததில் 12-பேரும் பூரண குணம் பெற்றிருக்கின்றனர். நியூயார்க்கின் மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் கேன்சர் சென்டரின் தலைமை மருத்துவர், டாக்டர் லூயிஸ் ஏ. டயஸ் ஜே, ‘புற்றுநோய் வரலாற்றில் இதுவே முதல்முறை’ என்று கூறியுள்ளார்.

 இந்தச் சிகிச்சையின் விளைவாக, ஒவ்வொரு நோயாளிக்கும், எண்டோஸ்கோபி, பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி (PET Scan) அல்லது எம்.ஆர்.ஐ (MRI) ஸ்கேன் என எந்த உடல் பரிசோதனை மூலம் கண்டறிய முடியாதபடி புற்றுநோய் முற்றிலும் காணாமல் போயிருந்தது. சிகிச்சை முடிந்து ஒரு வருடத்துக்குப் பின்னரும் வேறு விதமான சிகிச்சைகள் எதுவும் தேவைப்படவில்லை என்பது கூடுதல் செய்தி. இந்த ஆய்வுக்கு , டோஸ்டர்லிமாப் மருந்தை கிளாக்ஸோ ஸ்மித்க்லைன் (GSK) என்ற நிறுவனம் ஸ்பான்சர் செய்துள்ளது.

இதுகுறித்து புற்றுநோயியல் நிபுணரும் ஆய்வின் முதன்மை ஆய்வாளருமான டாக்டர் ஆண்ட்ரியா செர்செக் கூறும்போது, \”இந்த ஆய்வின் முடிவுகள் நம்பமுடியாத அளவிற்கு பலனளிக்கிறது,\” என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கதிர்வீச்சு அல்லது அறுவைச்சிகிச்சை போன்றவற்றால் மலக்குடல் புற்றுநோயாளிகள் தங்களின் உறுப்புகளையோ, இயல்பான செயல்பாடுகளையோ இழக்க நேரிடும். ஆனால் நோயெதிர்ப்பு சிகிச்சையின் பலனாக வேறெந்த சிகிச்சையும் அவசியப்படாமல், தங்களை இந்தக் கொடிய நோயிலிருந்து, சிகிச்சையின் பின்விளைவுகளிலிருந்தும் காப்பாற்றியதாக சிகிச்சை பெற்ற நோயாளிகள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து வருகின்றனர்.

எனினும் இந்த மருந்தே புற்றுநோயை முற்றிலும் அழிக்கக்கூடிய மாய மருந்து என்ற முடிவுக்கு வருமுன் வேறுசில காரணிகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த ஆய்வுக்கு டிஎம்எம்ஆர் (dMMR - Deficient DNA Mismatch Repair) என்ற மரபணு பிறழ்வுள்ள மலக்குடல் புற்றுநோயாளிகள் மட்டுமே உட்படுத்தப்பட்டனர்.

புற்றுநோயும் அதன் சிகிச்சைகளும் தோன்றும் இடம், தன்மை, மரபுக்காரணிகள், ஹார்மோன்கள், வயது, பால் போன்ற பல காரணங்களைப் பொறுத்து வேறுபடலாம். இந்த ஆய்வுக்குக் குறைவான எண்ணிக்கையிலான நோயாளிகளே பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்பதும், (12) இந்த ஆய்வு முடிந்து குறைந்த கால அளவே ஆகியுள்ளது (ஒரு வருடம்) போன்றவையும் கருத்தில்கொள்ள வேண்டியவை. ஏற்கெனவே ஜெம்பெரிலி (Jemperli) என்ற பெயரில் இந்த மருந்து கர்ப்பப்பை புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்ட மருந்து என்பதும் நாம் அறிய வேண்டிய செய்தி.

ஒரு தடவை இந்த மருந்தை எடுத்துக்கொள்ள ஆகும் செலவு கிட்டத்தட்ட ஒன்பது லட்சம் ரூபாய். சிகிச்சையின் முடிவில் பல லட்சங்கள் செலவாகும் இந்தச் சிகிச்சை, இந்திய நோயாளிகளும் பயன்பெறும் வகையில் ஜெனிரிக் மருந்தாக கிடைத்தால் பயனடையலாம்.சமீபகாலமாக கீமோதெரபி வகை மருந்துகளும் (அதிக செயல்திறன் கொண்டவை) குறைவான பக்கவிளைவுகளுடன் வரத்துவங்கியுள்ளன. நோயின் பகுதியை இலக்காகக் கொண்டு அழிக்கும் மருந்துகளும் (targeted therapy/drugs-small molecule inhibitors) இணைந்து செயலாற்றும் மருந்துகளும் நல்ல பலனைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன. இத்துடன் நாம் இன்றியமையாமல் கடைபிடிக்க வேண்டியது, ஆரோக்கியமான வாழ்க்கைமுறைகளும், உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்து ஆரம்ப நிலையியே சிகிச்சை எடுத்து நம்மைத் தற்காத்துக்கொள்வதும்தான்.

எத்தனையோ கொடிய தீவிர நோய்களுக்கு மருந்தாகியிருக்கிறது அறிவியல். குழந்தைகள் முதல் பெரியவர் வரை யாரையும் விட்டுவைக்காது தாக்கும் இந்தக் கொடிய நோய்க்கு மந்திரக்கோல் போல் ஏதேனும் மருந்தை அறிவியல் உலகம் வழங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. நம்பிக்கையோடிருப்போம்.

Tags :
× RELATED கவுன்சலிங் ரூம்