சென்னை: சென்னை புறநகரில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் மார்ச் 31-ம் தேதி முதல் உயர்கிறது. பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் ஒன்றிய நெடுஞ்சாலைத் துறை புதிய சாலைகளை அமைத்து வருகிறது. நெடுஞ்சாலைகள் தான் பாதுகாப்பான மற்றும் விரைவான போக்குவரத்தை உறுதி செய்கிறது. இருப்பினும், நெடுஞ்சாலைகளில் பயணிக்க நாம் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும். முன்பு சுங்கச்சாவடிகளிலேயே நாம் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருக்கும். ஆனால், இப்போது அந்த நிலை மாறி, பாஸ்டேக் முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதனால் சுங்கச்சாவடிகளில் நாம் காத்திருக்க வேண்டிய நேரமும் வெகுவாக குறைந்துள்ளது. நாடு முழுக்க இப்படி 566 சுங்கச்சாவடிகள் உள்ளன. அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் மட்டும் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. ஒன்றிய நெடுஞ்சாலை அமைச்சகம் நெடுஞ்சாலைகள் ஆணையங்கள் மூலம் சுங்கச்சாவடிகளைத் தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் அளித்துவிடும். அதன் பிறகு தனியார் நிறுவனங்களே சுங்கக் கட்டணத்தை வசூலிக்கும். சுங்கச்சாவடிகளின் கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் 5 முதல் 10 சதவிகிதம் வரை உயர்த்தப்படும்.1992இல் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும் 2008இல் போடப்பட்ட சாலைகளுக்கு செப். மாதமும் கட்டணம் உயர்த்தப்படும்.
இதற்கிடையே இப்போது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது சென்னை புறநகரில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் மார்ச் 31-ம் தேதி முதல் உயர்கிறது. சென்னையில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கோவை, மதுரை செல்லும் வழிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. சென்னை புறநகரில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.