×

வொர்க் அவுட்ஸ்… 6 மித்ஸ் vs உண்மைகள்

நன்றி குங்குமம் டாக்டர்

உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடலை வலுவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இல்லாதவர்களே கிடையாது. ஆனால், மெனக்கெட்டு ஜிம்முக்குப் போய் வொர்க் அவுட் செய்பவர்கள் மிக அரிது. பலருக்கு வொர்க் அவுட்ஸ் செய்வது தொடர்பாய் பலவிதமான கற்பிதங்கள் உள்ளன. இந்த வொர்க் மித்ஸில் எதெல்லாம் சரி எதெல்லாம் தவறு?

மித்:ஆரோக்கியம் நிறைந்த வலுவான உடலைப் பெற அதிக உடற்பயிற்சிகள் தேவை.

உண்மை: நல்ல பலம் வாய்ந்த உடலைப் பெற வேண்டுமென்றால், புல் வொர்க்கர் போன்று தசைக்குப் பயிற்சி அளிக்கும் பயிற்சிக் கருவிகளில் பயிற்சி மேற்கொண்டால்தான் முடியும் என்பதுகூட தவறான அபிப்ராயம்தான். அதற்குப் பதிலாக நல்ல முறையான உணவுப்பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். அதுதான் ஆரோக்கியமான உடலை அளிக்கும். மற்றபடி அளவான உடற்பயிற்சியே ஆரோக்கியமானது.

மித்: உட்கார்ந்து எழும் உடற்பயிற்சியைப் பலமுறை செய்துவந்தால், இடுப்புப் பகுதியில் விழும், டயர் போன்ற மடிப்பு நீங்கிவிடும்.

உண்மை: வீட்டிலிருக்கும் குடும்பத் தலைவிகள் தவறாமல் செய்வது உட்கார்ந்து எழும், ‘சிட் அப்’ பயிற்சிகளைத்தான். இதைச் செய்தால் வயிற்றுப்பகுதியில் சேரும் கொழுப்புகள் கரைந்துவிடும் என்ற நம்பிக்கை பெண்களிடம் உள்ளது. இது, உடனடியாக நடக்கும் காரியம் அல்ல. ஏனென்றால், நம் உடலில் கொழுப்பு உற்பத்தியாகி ஒரே பகுதியில் மட்டும் இருக்கக்கூடியது அல்ல. நம் உடலின் பல பகுதிகளில் தங்கி இருக்கும். ‘சிட் அப்’ எக்ஸர்சைஸ்கள் நம் இடுப்புப் பகுதி நன்றாக வலுப்பெற உதவிடும். ஆனால் சதையைக் குறைக்காது. அப்படி உபரியான சதையைக் குறைக்க வேண்டுமானால் கடுமையான பயிற்சிகள் மூலம் நம் உடலின் கொழுப்பைப் போக்கலாம். உதாரணமாக, நெடுந்தூரம் ஜாகிங் போகலாம். கூடவே, கொழுப்புச்சத்து மிகுதியாய் உள்ள உணவு வகைகளை உண்பதைத் தவிர்க்கவேண்டும்.

மித்: கடினமான உடற்பயிற்சியே எப்போதும் செய்ய வேண்டும்.

உண்மை: போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற விரும்புபவர்கள், பாடி பில்டர்களுக்கு வேண்டுமானால், கடுமையான உடற்பயிற்சித் தேவைப்படலாம். மற்றவர்களுக்குக் கடுமையான உடற்பயிற்சி தேவை இல்லை. ‘நோ பெயின் நோ கெயின் ‘ (No Pain; No Gain) என்று சொல்வது எல்லாம் உடற்பயிற்சி விஷயத்தில் சரியானது அல்ல. வலி உண்டாகும் அளவு நாம் உடற்பயிற்சிகளைச் செய்யக் கூடாது. அவை வேறுவிதமான ஆபத்துக்களை உண்டாக்கிவிடும்.

மித்: சாப்பிட்ட பிறகு உடற்பயிற்சி செய்யக் கூடாது.

உண்மை: சாப்பிட்ட உடனே உடற்பயிற்சி செய்யக்கூடாது என்பது உண்மைதான். ஆனால், சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்து உடற்பயிற்சி செய்வதில் தவறு இல்லை. பொதுவாக, விளையாட்டு வீரர்கள் நன்றாகச் சாப்பிட்ட பிறகே பயிற்சி மேற்கொள்கிறார்கள். மற்றவர்களுக்குத் தேவைப்படுவதைவிட அதிக கலோரி அவர்களுக்குத் தேவை என்பதால் அவ்வாறு செய்கிறார்கள். சாப்பிட்ட மதமதப்பு உடலில் நீங்கிய பின் உடற்பயிற்சி செய்வது தவறு இல்லை. ஆனால் சாப்பிட்டவுடனே செய்ய வேண்டாம்.

மித்: விடியற்காலைப் பொழுதில்தான் உடற்பயிற்சிகளைச் செய்யவேண்டும்.

உண்மை: ராணுவம் மற்றும் படைக்கலன் துறைகளில் உள்ளவர்களுக்கு வேண்டுமானால் இது சரியாக இருக்கலாம். சரிப்பட்டும் வரலாம். மற்றபடி உடற்பயிற்சி செய்வதற்கு எந்த நேரம் வசதியாக இருக்கிறதோ அந்த நேரத்தில் உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம். மாலைப்பொழுதுகளிலும் உடற்பயிற்சிகளைச் செய்யலாம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், வெயில் மிகுதியான, வெப்பமான இடங்களில் உடற்பயிற்சி செய்தால், தேவைக்கு அதிகமான அளவு வியர்வை வெளியேறி உடல் விரைவாகச் சோர்வடையும்.

மித்: ஜிம்மில் வொர்க் அவுட் செய்தால் சப்ளிமென்ட்டுகள், ஹெல்த் ட்ரிங்க்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும்.

உண்மை: சப்ளிமென்ட்டுகள் மற்றும் ஹெல்த் ட்ரிங்க்ஸ் என்பவை ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் தொழில்முறை பாடி பில்டர்கள் போன்றவர்களுக்குத்தான் தேவை. மற்றபடி, உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள ஜிம்முக்குப் போய் வொர்க் அவுட் செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் ஆரோக்கியமான புரதச்சத்தும் ஊட்டச்சத்தும் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டாலே போதும். சரியான நேரத்தில் முறையான உணவு எடுத்துக்கொள்வதே ஆரோக்கியத்துக்கு அடிப்படை. சப்ளிமென்ட்டுகள் எல்லோருக்கும் ஏற்றவை அல்ல. மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எடுத்துக்கொள்ளக்கூடாது.

மித்: பெண்களுக்கு ஜிம் எல்லாம் தேவை இல்லை. இதனால் அவர்களின் அழகும் உடல் வடிவும் மாறிவிடும்.

உண்மை:
இது மிக மிக தவறான கருத்து. ஆணோ பெண்ணோ இருபாலருக்குமே உடற்பயிற்சிகள் மிகவும் அவசியம். நம் நாட்டில் பெண்கள் ஜிம்முக்குச் செல்வது தொடர்பான மனத்தடை இப்போது வரை இருந்துவருகிறது. பெண்களுக்கான பிரத்யேகப் பயிற்சியாளர்கள் கொண்டு அவர்களுக்கான பிரத்யேக உடற்பயிற்சிகளைச் செய்யும் வழக்கம் இப்போது சிறு நகரங்களில்கூட வந்துவிட்டது. ஜிம்முக்கு வழக்கமாகச் சென்று உடற்பயிற்சி செய்வதன் மூலம் பெண்களுக்கு நளினமும் வடிவும் மேம்படுமே அன்றியும் குறையவே குறையாது.

தொகுப்பு - வெற்றி

Tags :
× RELATED கவுன்சலிங் ரூம்