சென்னை விமான நிலைய விரிவாக்கம் முதல் கட்ட பணிகள் நிறைவு: 10ம் தேதி வரை சோதனை ஓட்டம்

சென்னை: சென்னை விமான நிலையம் ரூ.2,400 கோடி மதிப்பீட்டில் 2.36 லட்சம் சதுர மீட்டரில், அதிநவீன ஒருங்கிணைந்த விமான நிலையங்களாக உருவாகி வருகிறது. தற்போது முதல் கட்ட பணி நிறைவடைந்துள்ளது. இதையடுத்து அந்த கட்டிடத்தில் நவீன கருவிகள், உபகரணங்கள் பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த கட்டிடம் 5 தளங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் அடித்தளம் பயணிகளின் உடைமைகளை கையாளுதல் பகுதியாகவும், தரைதளத்தில் சர்வதேச விமான பயணிகள் வருகை பகுதியும், 2வது தளத்தில் புறப்பாடு பயணிகள் பகுதியும் அமைக்கப்படுகின்றன. மற்ற தளங்களில் விமான நிறுவனங்களின் அலுவலகங்கள், பயணிகள் தங்கும் அறைகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலக பணிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன.

இந்த புதிய கட்டிடத்தில் அடித்தள பகுதியில் பயணிகளின் உடைமைகளை கையாளும் அதிநவீன கருவிகள் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளன. வரும் 10ம் தேதி வரை சோதனை அடிப்படையில், பயணிகளின் உடைமைகள் கையாளப்படும் பணி தொடங்கியுள்ளது. இந்த அதிநவீன வசதியின்படி பயணிகளின் உடைமைகள் பரிசோதிக்கும் போது, பயணிகள் அந்த இடத்திற்கு வரவேண்டிய அவசியம் இல்லை. காத்திருப்பு பகுதியில் அமர்ந்திருந்து, வீடியோ மூலம் தங்களுடைய உடைமைகள் பரிசோதனையை கண்காணிக்கலாம். அந்த நேரத்தில் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதாவது இருந்தால், அதை தானியங்கி இயந்திரம் மூலம் அகற்றப்படுவதையும் பார்க்கலாம்.இந்த புதிய முனையத்தில் பயணிகளின் பரிசோதனை கவுன்டர்கள் 140 அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது, சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய அதிநவீன இயந்திரங்களின் செயல்பாடுகள், 10ம் தேதி வரை நடைபெறும். வெற்றிகரமாக முடிவடைந்தால், அடுத்தகட்ட பணிகள் தொடங்கும். 5 தளங்களுடன் வடிவமைக்கப்பட்டு, அதிநவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, சென்னை விமான நிலையம் மேலைநாட்டு விமான நிலையங்களைவிட சிறப்பான முறையில் அமைக்கப்படுகிறது. பயணிகள் ஓய்வு எடுப்பதற்கு அதி நவீன சொகுசு இருக்கைகள், சாய்வு இருக்கைகள் ஏராளமாக அமைக்கப்பட்டுள்ளன. 5 தளங்களிலும் கருவிகள் பொருத்தும் பணி முடிவடைந்த பின்பு, இந்த முதற்கட்ட பேஸ் கட்டிடம் செயல்பாட்டுக்கு வரும். அதற்கு பிறகு, செயல்பாட்டில் இருக்கும் சர்வதேச முனையத்தின் வருகை பகுதி கட்டிடங்கள் இடிக்கும் பணி தொடங்கும். அதன் பின்பு பேஸ் 2க்கான கட்டிடங்கள் கட்டும் பணி தொடங்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.   

Related Stories: