ஒவ்வொரு நாளும் பெண்கள் கொண்டாடப்பட வேண்டும் அரசியலில் ஈடுபட பெண்களுக்கும் முழு தகுதி உள்ளது: மேயர் பிரியா பேச்சு

சென்னை: ஒவ்வொரு நாளும் பெண்கள் கொண்டாடப்பட வேண்டும் என்றும், அரசியலில் ஈடுபட பெண்களுக்கும் முழு தகுதி உள்ளது என்றும் மேயர் பிரியா கூறினார். சென்னை மாநகராட்சியின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா ரிப்பன் கட்டிட கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. விழாவுக்கு, மேயர் பிரியா தலைமை வகித்தார். அப்போது, பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய மகளிர் அலுவலர்களுக்கு மகளிர் சாதனையாளர் விருதுகளை வழங்கி பாராட்டினார். மேலும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மகளிர் அலுவலர்களுக்கிடையே நடந்த பட்டிமன்றம், பாட்டுப்போட்டி, கவிதைப் போட்டி, இசை நாற்காலி உள்ளிட்ட  போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் வழங்கினார்.

அப்போது, மேயர் பிரியா பேசியதாவது: இன்று மகளிர் தினம் என்பதை தாண்டி எனக்கு தனிப்பட்ட முறையில் இது ஒரு சிறப்பான நாள். ஏனெனில் கடந்த ஆண்டு நான் மேயர் பதவி பொறுப்பேற்ற பிறகு முதல் முதலாக கலந்துகொண்ட நிகழ்வு இந்த மகளிர் தினம். கடந்த மகளிர் தினத்தில் நான் குறிப்பிட்டதை இப்பொழுதும் குறிப்பிட விரும்புகிறேன். எல்லா ஆண்களுக்குப் பின்னும் ஒரு பெண் இருப்பார்கள் என்பது போல், எல்லா பெண்களுக்கு பின்னும் ஒரு ஆண் இருப்பார்கள். மகளிர் தினத்தில் மட்டும் மகளிரை கொண்டாட வேண்டும் என்பதை தவிர்த்து ஒவ்வொரு நாளும் பெண்கள் கொண்டாடப்பட வேண்டும்.

அதுதான் என்னுடைய கருத்து. ஏனெனில், பெண்கள் ஒவ்வொரு நாளும் தனது குடும்பத்திற்காகவும், சமுதாயத்திற்காகவும் பாடுபடுகின்ற காரணத்தினால் நிச்சயம் எப்பொழுதும் கொண்டாடப்பட வேண்டும். தற்பொழுது பெண்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பாக சேவை புரிந்து வருகின்றனர். எனவே, ஒவ்வொரு நாட்களும் பெண்களை கொண்டாட வேண்டும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்ணாக பிறந்த அனைவரும் நாம் பெருமைப்பட வேண்டும், பெண் பிள்ளைகளைப் பெற்றிருந்தால் நாம் இன்னும் அதிகமாக பெருமைப்பட வேண்டும்.      

ஒரு பெண் பிள்ளையை நம் வீட்டில் வளர்ப்பதை விட நாம் வளர்க்கும் ஆண் பிள்ளைகளிடம் பெண் பிள்ளைகளை எப்படி நடத்த வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். பெண்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டும், மரியாதை தர வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்து வளர்க்க வேண்டும். பெண்கள் பொதுவாக டாக்டராக வேண்டும், கலெக்டராக வேண்டும் என்று தான் கூறுவார்கள். என்னைப் பொறுத்தவரை பெண்கள் அரசியலிலும் ஈடுபடலாம். அவர்களுக்கு அதில் முழு தகுதி உள்ளது.

ஏனெனில், மக்களுக்கு சேவை செய்யக்கூடிய இடம், அதை நான் உணர்ந்துள்ளேன், அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், இணை ஆணையர் (பணிகள்) ஜி.எஸ்.சமீரன், துணை ஆணையர் விஷூ மஹாஜன், ஆளுங்கட்சித் தலைவர் ஆர்.ராமலிங்கம், நிலைக்குழுத் தலைவர் (பொதுசுகாதாரம்) கோ.சாந்தகுமாரி, மாநகர நல அலுவலர் எம்.ஜெகதீசன், மாநகர மருத்துவ அலுவலர் எம்.எஸ்.ஹேமலதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: