தாளவாடி மலைப்பகுதியில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் குண்டம் திருவிழா: தமிழக- கர்நாடக பக்தர்கள் பங்கேற்பு

சத்தியமங்கலம்: தாளவாடி மலைப்பகுதியில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் குண்டம் திருவிழா நடந்தது. இதில், தமிழக- கர்நாடக மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஈரோடு மாவட்டம், தாளவாடி மலை பகுதியில், அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற கொங்கள்ளி மல்லிகார்ஜுன சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் வழிபாட்டிற்கு பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு குண்டம் திருவிழா நேற்று காலை விமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவில் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள 32 கிராமங்களை சேர்ந்த ஆண் பக்தர்கள் மற்றும் கர்நாடக மாநிலம் மைசூர், சாம்ராஜ் நகர், குண்டல்பேட்டை, கொள்ளேகால் பகுதியை சேர்ந்த பக்தர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்றனர். கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர், கோயில் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் பூசாரி ஒருவர் மட்டும் பக்தி பரவசத்துடன் தீ மிதித்தார். அப்போது குண்டம் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் ஆரவார கோஷமிட்டனர்.

தாளவாடி மலைப்பகுதியில் உள்ள கோயில்களில் நடைபெறும் குண்டம் திருவிழாவில் பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்குவது வழக்கம். பொதுமக்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்படுவதில்லை. இந்த கோயிலில் பெண்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்படாததால் 2 கிலோ மீட்டருக்கு முன்பாக தடுத்து நிறுத்தப்பட்டு அங்கு உள்ள நந்தவனம் பகுதியில் பெண்கள் வழிபாடு நடத்தினர்.

Related Stories: