×

இன்று மட்டுமல்ல.... ஒவ்வொரு நாளும் பெண்களின் தினமே...!

‘தாயாக... சகோதரியாக... மனைவியாக... தோழியாக...’ என ஆரம்பிக்கும் மகளிர் தின வாழ்த்துகள் இன்று சமூக வலைத்தளங்களில் நிரம்பி வழியும். ஆம்... இன்று மகளிர் தினம். இன்று மட்டுமா பெண்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள்? யோசித்து பாருங்கள். உலகின் உச்சக்கட்ட வலியான பிரசவ வலியை பொறுத்துக் கொண்டு, இவ்வுலகில் மனித இனம் தழைக்க 10 மாதங்கள் அவர்கள் படும் அந்த சிரம காலங்கள் போதாதா? அவர்களை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாட? ஆண்டுதோறும் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்திற்கு, ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருள் நிர்மாணிக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு பாலின சமத்துவத்திற்கான புத்தகங்கள் மற்றும் தொழில்நுட்பம் என்ற பெயரில் கருப்பொருள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பெண்கள் என்றால் வலிமை இல்லாதவர்கள், பலவீனமானவர்கள், துணிச்சலாக எதிலும் ஈடுபட மாட்டார்கள் என பலரும் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் உண்மையில் பெண்களைப் போல் வலிமையானவர்கள், துணிச்சல் ஆனவர்கள் யாரும் இல்லை. பெண்களைப் பொறுத்தவரை உடல் ரீதியில் வலிமையானவர்களாக தெரியாவிட்டாலும் மனதளவில் அவர்கள் மிகவும் வலிமையானவர்கள். அவர்கள் சாதிக்க நினைத்தால் அது எந்த துறையாக இருந்தாலும் அதில் சாதித்து காட்டும் அளவிற்கு திறமை மிக்கவர்கள்.
தற்போதைய காலகட்டத்தில் உடல் அளவிலும், பெண்கள் வலிமையானவர்கள் என நிரூபித்து வருகின்றனர்.

பெண்களைப் பொறுத்தவரை குடும்பத் தலைவியாக இருந்து குடும்பத்தை வழி நடத்துவது மட்டுமல்லாமல் அரசியல், பொருளாதரம், தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தங்கள் கால் தடத்தை பதித்து சம்பந்தப்பட்ட துறைகளில் சிறந்து விளங்கி வருகின்றனர். ஆண்களால் மட்டும் தான் அனைத்து துறைகளிலும் சாதிக்க முடியும் என்ற கருத்தை மாற்றி பெண்களாலும் எல்லாம் முடியும் என நிரூபித்து காட்டி வருகின்றனர். உலகில் பல பகுதிகளில் ஆண்களின் தயவு இல்லாமல் பெண்கள் தாங்களாகவே உழைத்து தங்களது குடும்பங்களை வழி நடத்தி வருகின்றனர்.

பெண்கள் யாருக்கும், எதிலும் தாழ்ந்தவர்கள் இல்லை என்பதை வலியுறுத்தவே ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினம் கோலாகலமாக கொண்டாடப்படும் போது ஆண்களால் மட்டுமல்ல பெண்களாலும் அனைத்திலும் சாதிக்க முடியும் என்ற உணர்வு அனைவருக்கும் எழ வேண்டும் என்பதே பெரும்பாலானவரின் கருத்துகளாக உள்ளது. இதுகுறித்து கல்லூரி மாணவி அக்ஷதா கூறுகையில், ‘‘வலிமையான பெண்கள் விலைமதிப்பற்ற ரத்தினங்கள், அவர்கள் தங்கள் சொந்த வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் இருப்பார்கள் மேலும் அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்களின் வெற்றியை ஊக்குவிக்கிறார்கள். நாம் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தும் போது நாம் இன்னும் கொஞ்சம் வளர்கிறோம்.

வரவிருக்கும் தலைமுறையினர் ஒருவரையொருவர் உயர்த்துவதன் மூலம் மதிப்புகளை வளர்க்கும் பொறுப்பை ஏற்க வேண்டும் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்,’’ என்றார். கல்லூரி மாணவி ஷிபா ஹூசைன் கூறுகையில், ‘‘சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்களின் சாதனைகளைக் கொண்டாடுவதற்கும், பாலின சமத்துவத்துக்காக நடந்து வரும் போராட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான வாய்ப்பு. பெண்கள் சமூகத்தில் தனித்துவமான சவால்களை எதிர்கொள்கிறார்கள் அவற்றைக் கடக்க வலிமை தேவை.

முன்னேற்றம் இருந்தபோதிலும், பெண்களுக்கு சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகள் இருப்பதை உறுதி செய்வதற்கான பணிகள் இன்னும் செய்யப்பட வேண்டும்,’’ என்றார்.குடும்பத் தலைவி பவானிஸ்ரீ கூறுகையில், ‘‘பெண்கள் முந்தைய காலத்தை காட்டிலும் தற்போது அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். குறிப்பாக பல்வேறு ஆன்லைன் டெலிவரி செய்யும் நிறுவனங்களில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் வேலை செய்து வருகின்றனர். காரணம் அனைத்து பெண்களுக்கும் சுயமாக வேலை செய்து சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து உள்ளது. ஒரு காலத்தில் கணவர்களின் வருமானத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்த பெண்கள் தற்போது தாங்களாகவே சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. முந்திய காலம் போல இல்லாமல் தற்போது ஆண்களும் பெண்களின் முன்னேற்ற பாதைகளுக்கு வழி வகுக்கின்றனர்,’’ என்றார்.

Tags : women's day , Not only today....every day is women's day...!
× RELATED மனவெளிப் பயணம்