அரசு சிவில் சர்வீஸ் பயிற்சி மையம் மீண்டும் அண்ணா நகருக்கு திரும்புவதால் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். சென்னை அண்ணா நகரில் 2000ம் ஆண்டு காலகட்டத்தின் போது நீண்ட காலமாக இயங்கி வந்த அரசு சிவில் சர்வீஸ் பயிற்சி மையம் மீண்டும் அதே பகுதிக்கு திரும்ப உள்ளது. மாணவர்களின் பல ஆண்டு கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு இந்த முக்கிய முடிவை எடுத்தது.
இதற்காக அண்ணா நகரில் புதிய நவீன பயிற்சி வளாகம் அமைக்கப்படவுள்ளதாகவும், கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது, அரசு சார்பில் நடத்தப்படும் ஐஏஎஸ் பயிற்சி மையம் ஆரம்ப காலங்களில் சென்னை அண்ணா நகர் பகுதியில் செயல்பட்டு வந்தது. அகில இந்திய குடிமைப்பணி தேர்வுகளுக்கு தயாராகும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்களுக்கு இலவசமாகவும், குறைந்த செலவிலும் பயிற்சி வழங்கிய இந்த மையம், குறிப்பாக தமிழ்நாடு அரசில் இப்போதுள்ள பல ஐஏஎஸ் அதிகாரிகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது.
இந்நிலையில், 2008-09 காலகட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக அண்ணா நகரில் இருந்த அரசு பயிற்சி மையத்தின் நிலம் கையகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அந்த மையம் ஆயிரம் விளக்கு பகுதியில் மாற்றப்பட்டது. அங்கு புதிய கட்டிடம் மற்றும் அடிப்படை வசதிகள் இருந்தபோதிலும், அண்ணா நகரில் இருந்ததைப் போன்ற கல்வி சூழல் அங்கு உருவாகவில்லை.
குறிப்பாக, அடையாறு பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் தங்குமிடம் மற்றும் உணவுக்கான செலவுகள் அதிகமாக இருந்ததால், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் தங்கி பயில்வதில் கடும் சிரமங்களை சந்தித்தனர். இதன் காரணமாக, அரசு சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்தை புதிதாக கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களிடையே தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்த கோரிக்கையை ஏற்று, கடந்த ஆண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ், அண்ணா நகரில் மீண்டும் அரசு சிவில் சர்வீஸ் பயிற்சி மையம் அமைக்கப்படும் என அறிவித்தார். மேலும், செனாய் நகர் பகுதியில் 500 மாணவர்கள் தங்கி பயிலக்கூடிய வகையில், அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய ஒரு குடியிருப்பு பயிற்சி மையம் 40 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து, அண்ணா நகரில் அரசு நிலம் தேடப்பட்டபோது போதிய இடம் கிடைக்காததால், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தை இந்த திட்டத்திற்காக பயன்படுத்த அரசு முடிவு செய்தது. இதற்காக சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தலைமையில் மேயர் மற்றும் மாநகராட்சி கவுன்சிலின் ஒப்புதலுடன், தடையின்மை சான்றிதழ் மற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நிலம் ஒதுக்கப்பட்டது.
தற்போது, விரிவான கட்டுமானத் திட்டம் தயாரிக்கப்பட்டு, சுமார் 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. டெண்டர் நடைமுறைகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்னும் 18 மாதங்களுக்குள் கட்டுமானப் பணிகள் நிறைவடையவுள்ளது. புதிய பயிற்சி மையம் ஒரு முழுமையான தங்கி பயிலும் பயிற்சி மையமாக அமையும்.
மாணவர்கள் ஒரே வளாகத்தில் தங்கி பயிலவும், உணவு, நூலகம், வகுப்பறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பயன்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இதன் மூலம், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தயாராக சிறந்த வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முயற்சி, தமிழகத்திலிருந்து அதிக எண்ணிக்கையிலான ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அகில இந்திய குடிமைப்பணி அதிகாரிகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையையும் கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். அதே சமயம் தமிழக அரசு அறிவித்து சில மாதங்களில் அதற்கான இடத்தை விரைவாக ஒதுக்கிய சென்னை மாநகராட்சியையும் தமிழ்நாடு அரசையும் ஐஏஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
