வேதாரண்யம் அருகே அதிகளவில் சிக்கிய ராட்சத திருக்கை மீன்கள்: மீனவர்கள் மகிழ்ச்சி

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் அக்டோபர் முதல் மார்ச் வரை மீன்பிடி சீசன் காலமாகும். இந்த சீசன் காலத்தில் கோடியக்கரை கடற்கரைக்கு பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் வந்து தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆழ்கடல் பகுதிக்கு சென்று மீன் பிடித்த மீனவர்கள் நேற்று காலை கரை திரும்பினர். அப்போது மீனவர்களது வலையில் அதிகளவில் திருக்கை மீன்கள் சிக்கியது. மேலும் சிங்கி இறால், நண்டும் அதிகளவில் கிடைத்தது.

கோடியக்கரையில் திருக்கை மீன் ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.70 வரை ஏலம் எடுத்து வெளியூர் வியாபாரிகள் வாங்கி சென்றனர். 40 கிலோ எடை உள்ள கண்ணாமுழி திருக்கை, 60 கிலோ எடையுள்ள புள்ளி திருக்கை உள்ளிட்ட 10 வகை திருக்கை மீன்கள் சிக்கி இருந்தது. இதுகுறித்து கோடியக்கரை மீனவர் நலச்சங்க முன்னாள் செயலாளர் சித்திரவேலு கூறியதாவது: கடந்த சில நாட்களாக மீனவர்கள் வலைகளில் திருக்கை, சிங்கி இறால் வகை மீன்கள் அதிகளவில் கிடைக்கிறது. இந்த மீன்களுக்கு நல்ல விலையும் கிடைப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றார்.

Related Stories: