பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் குழாய் வழியாக குருடாயில் அனுப்பும் பணி நிறுத்தம்-நாகப்பட்டினம் கலெக்டர் உத்தரவு

நாகப்பட்டினம் : நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமம் வழியாக செல்லும் குழாயில் மாவட்ட நிர்வாகத்தின் மறு உத்தரவு வரும் வரை குருடாயில் அனுப்பும் பணியில் சிபிசிஎல் நிறுவனம் ஈடுபடக்கூடாது என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.நாகூரில் பட்டினச்சேரி மீனவ கிராமம் வழியாக பூமிக்கு அடியில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சிபிசிஎல்) சார்பில் கச்சா எண்ணெய் எடுத்து செல்வதற்காக குழாய் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்டது.

இந்த குழாயில் கடந்த 2ம் தேதி நள்ளிரவு திடீரென கசிவு ஏற்பட்டு குருடாயில் கடல் நீர் முழுவதும் பரவியது. இதனால் நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமம் மட்டும் இன்றி அருகில் உள்ள மீனவ கிராமங்களும் பாதிக்கப்பட்டது. பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பின்னர் சிபிசிஎல் நிர்வாகம் நேற்று முன்தினம் (5ம் தேதி) இரவு குழாய் உடைப்பை சீர் செய்தது.

ஆனால் நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமம் வழியாக செல்லும் சிபிசிஎல் நிறுவனத்தின் குழாய்களை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்று மீனவ கிராம மக்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு நாகப்பட்டினம் தாலுகா மீனவர்கள் அவசர கூட்டம் நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் நடந்தது.

இதில் கடற்கரையோரம் பதித்துள்ள குழாய்களை முழுமையாக அகற்றாத சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து நாகூர் அருகே பனங்குடியில் அமைந்துள்ள சிபிசிஎல் நிறுவனத்தை நாளை (8ம் தேதி) முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றினர். இந்நிலையில், பட்டினச்சேரி மீனவர்களை கலெக்டர் அருண்தம்புராஜ் நேற்று நேரில் சந்தித்தார். இதை தொடர்ந்து குருடாயில் கசிவு ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்தார். சிபிசிஎல் நிறுவன அதிகாரிகள், நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராம மக்களை அழைத்து பேசினர். அப்போது இருதரப்பினர் இடையே உள்ள பிரச்சனைகளை கேட்டறிந்தார். இதை தொடர்ந்து கலெக்டர் அருண்தம்புராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:

சிபிசிஎல் நிறுவனம் சார்பில் புதைக்கப்பட்டுள்ள குழாயில் இருந்து குருடாயில் கசிவு ஏற்பட்டு நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமம் பாதிப்படைந்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிபிசிஎல் அதிகாரிகள் தொடர் முயற்சியின் காரணமாக குழாய் சீர் செய்யப்பட்டுள்ளது.

எனவே மீனவர்களிடம் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு மீன்பிடிக்க செல்ல வேண்டும். கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாய் சீரமைத்து விட்டதால் மீனவர்கள் யாரும் அச்சம் அடைய வேண்டாம். மாவட்ட நிர்வாகம் சார்பில் மறு உத்தரவு வரும் வரை இந்த குழாய் வழியாக கச்சா எண்ணெய் கொண்டு செல்வது உள்ளிட்ட எந்த பணிகளையும் சிபிசிஎல் நிர்வாகம் ஈடுபட கூடாது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

குழாய் கசிவால் வெளியேறிய எண்ணெய் கடலில் கலந்து இருப்பதால் கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய சென்னையில் இருந்து தொழில்நுட்ப அதிகாரிகள் வருகை தரவுள்ளனர். அவர்கள் தண்ணீரின் தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கையை சமர்பிப்பார்கள். இதன் பின்னர் உரிய முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: