×

சிறப்புக் குழந்தைகளுக்கு உதவும் ஆக்குபேஷனல் தெரப்பி

நன்றி குங்குமம் டாக்டர்  

“நோய்வாய்ப்பட்ட மனம் நோய்வாய்ப்பட்ட  உடல்கள்
நோய்வாய்ப்பட்ட ஆன்மாக்கள்
தொழிலின் மூலம் குணமடையலாம்”
- வில்லியம் ரஷ் டன்டன்

தொழிற்சார் சிகிச்சையின் ஆரம்பகால வரலாறு கிரேக்க மருத்துவர் அஸ்க்லெபியாட்ஸ் காலம் தொட்டே இருக்கிறது. உளவியல் சம நிலையை அடைய இசை மூலம் மனதை சரி செய்ய முடியும் என்று நம்பிக்கையின் அடிப்படையில் சிகிச்சை முறையாக பரிந்துரை செய்தார். சிறைகளிலிருந்தும் கட்டுகளிலிருந்தும் விடுவித்து  அன்பாகவும் இனிமையாகவும் விரைவாக குணமடையும் வழிமுறைகளை  கண்டறிந்தார். அதன் தொடர்ச்சியாக பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஜோன் கிரிஸ்டியன் ரெயில் போன்ற புரட்சியாளர்கள் மருத்துவமனை அமைப்பை சீர்படுத்தினார்கள். மன நோயாளிகளை உலோக சங்கிலிகளால் கட்டிப் போடுவதற்கு பதில் கடுமையான வேலைகளை செய்வதற்கு உந்துதல் தந்தனர்.

இது போன்ற செயல்முறைகளை முன்னேறிய சமூகத்தின் வளர்ச்சியாக கருதியதின் விளைவு தொழிற்சார் சிகிச்சையாளர்கள் (Occupational Therapist) உருவானார்கள்.முதலாம் உலகப்போரில் காயமடைந்த படை வீரர்களுக்கு உதவுவதற்காக தொழிற்சார் சிகிச்சையாளர்களின் தேவை  அதிகரித்தது. இதைத் தொடர்ந்துதான் அமெரிக்க தொழிற்சார் சிகிச்சை அமைப்பைத் தொடங்கி அவர்களின் பணி முறைப்படுத்தப்பட்டது.

இன்று மிகப் பெரிய சமூகப் புரிதலையும் மகிழ்ச்சியான வாழ்வை உறுதி செய்யும் பணியையும் தொடர்ந்து செயலாற்றிக் கொண்டிருக்கின்றனர் தொழிற்சார் சிகிச்சையாளர்கள்.உடல் நலப் பிரச்சனைகளைப் பொறுத்தவரை ஒருவருக்கு மருந்துகள் அல்லது அறுவை சிகிச்சை, தொடர்சிகிச்சைகள் மூலம் முழு உடல் நலத்தை சரி செய்து விட முடியும். ஆனால் மனநலப் பிரச்சனை மற்றும் மூளை வளர்ச்சி குறைபாடு உடையவர்களைப் பொறுத்தவரை மருந்துகளுடன் பிற சிகிச்சை முறைகளும் தேவைப்படும்.

அதில் முக்கியமானது தொழிற்சார் சிகிச்சை முறை.இந்தியாவில் 1970-ம் ஆண்டு வரை தொழிற்சார் சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு இராணுவ மருத்துவமனைகளில் உள்ள சில குறிப்பிட்ட பிரிவுகளில் மட்டுமே இருந்தன. தொழுநோய்  பிரிவு காசநோய் பிரிவு, மனநோய் போன்ற துறைகளில் மட்டுமே இருந்தது. அவை அந்த காலத்தின் பலவீனமான நோய்களாக இருந்தன.
தொழிற்சார் சிகிச்சையின் மூலம் நோயிலிருந்து நோயாளிகளை திசைதிருப்பி அவர்களின் அன்றாட செயல்பாடுகளை  செய்வதற்கான திறனை மேம்படுத்த மறுவாழ்வு அல்லது பராமரிக்க சிகிச்சை நுட்பங்களைப் பயன்படுத்தும் ஒரு சிகிச்சைமுறையாக தொழிற்சார் சிகிச்சை முறையைப் பயன்படுத்தினர்.

அறிவியல்  வளர்ச்சியில் நவீன சமூகமாக மாறிவிட்ட இக்காலகட்டத்தில் தொழில் வழி சிகிச்சை பிரபலமாகிவருகிறது.ஒருவரின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த தொழிற்சார் சிகிச்சையாளர்கள் மூலம் உருவாகும் வாய்ப்புகள்  சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கி உள்ளது.குழந்தைகள் நலப் பிரிவில் பணிபுரியும் தொழிற்சார் சிகிச்சையாளர் திரு.மோகன்ராஜ் அவர்களிடம்  உரையாடிய போது அவர்களின் பணி சார்ந்த அடிப்படையான தகவல்களை நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

தொழிற்சார்  சிகிச்சையாளர்கள் குழந்தை களுக்கு ஏன் தேவைப்படுகிறார்கள்?

மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு அவர்களின் அன்றாடங்கள் பெரும் துயரமானது. பல் துலக்குதல், உணவு உண்பது, உடை உடுத்துவது, குளிப்பது போன்ற மிக அடிப்படையான விஷயங்களைப் பிள்ளைகளுக்குச் செய்வது பெற்றோர்களுக்கு மிகப் பெரிய சுமையாக இருக்கிறது. குறைபாடுடைய குழந்தைகளுக்கு காலைக் கடன் கழிப்பதிலிருந்து உணவு உண்பது தூங்குவது வரை அவர்களுக்கு பயிற்சிகள் தேவைப்படும்.

பெற்றோர்களுடன்  சேர்ந்து அன்றாட வேலைகளை சுயாதீனமாக கவனித்துக்கொள்ள பழக்கவழக்கச் செயல்பாடுகளை அந்தக் குழந்தையின் உடல் நிலைக்கு தக்கவாறு சில உபகரணங்ளுடன் பயிற்றுவித்து மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அன்றாட செயல்பாடுகளைப் பழக்குவித்தல் மூலம், அவர்களை சுய மரியாதையுடன் சுமையாக கருதாமல் அவர்களை அவர்களாகவே வாழ செய்வதில் பெரும்பங்கு நம் அனைவருக்கும் இருக்கிறது. அதில் ஒரு பகுதியாக நாங்கள் அவர்களுக்கு அவர்களின் வழியில்  உதவி செய்கிறோம்.

1.குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு பள்ளி மற்றும் சமூகத்தில்  பங்கேற்பதற்கு உதவுதல் மூலம் அவர்களின் இயல்பான வாழ்க்கை முறையை உறுதி செய்யமுடியும்.

2.கற்றல் குறைபாடுகள் அல்லது நடத்தை பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்கு இந்த சிறப்பு பிரிவின் மூலம் அவர்களின் தனித்திறன் சோதனையின் அடிப்படையில் அவர்களுக்குள் இருக்கும் இயல்பான திறனை வெளிக்கொண்டு வந்து அவர்களின் செயல் திறனை அதிகரிக்க முடியும். இதில் பெற்றோர் ஆசிரியர் பங்கும் மிகவும் முக்கியமானது.

நீங்கள் எப்படி நோயாளிகளை மதிப்பீடு செய்கிறீர்கள்?

நோயாளிகளின் நிலை மற்றும் தேவைகளை  அறிய மதிப்பீடு செய்தல் அவசியம்.அதன் அடிப்படையில் ஒரு நபருக்கு அன்றாட வேலைகளில் முழுமையாக ஈடுபடுவதில் சிரமம் இருந்தால் ஒரு சிகிச்சையாளர் அந்த நபருடன் சேர்ந்து குறிப்பிட்ட செயல்பாடுகள் மற்றும் பணிகளை அவரால்  ஏன் செய்ய முடியாது என்பதை மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் செயல் திறனில் உள்ள சிரமங்களுக்கான காரணங்களைத் தீர்மானிக்க அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

1.உடலியக்க பகுப்பாய்வு முறை.
2.உணர்திறனை அறிதல்.
3.அறிவாற்றலை அறிதல்
4.உள்ளார்ந்த செயல்பாடுகள்
5.தனிப்பட்ட செயல்பாடுகள்.

இவற்றை எல்லாம் அறிந்து சோதனைகளின் முடிவின் அடைப்படையில் செயல்திறனை மேம்படுத்துவதற்கான திட்டத்தை அவர்களோடு சேர்ந்து உருவாக்கி அதை செயல்படுத்த உதவி  செய்வது தொழிற்சார் சிகிச்சையாளர்தான்.நோயாளியின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் குறிப்பிட்ட இலக்குகளை அடைய அவர்களுக்கு உதவுவதற்கும் சிகிச்சை திட்டங்களை உருவாக்குதல் மிகவும் முக்கியமான செயல்பாடாகும்.ஒருவரின் உடல், மன உணர்ச்சி அல்லது  அவர் சார்ந்த சமூகப் பிரச்சனைகளை, மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் ஆதாரமான வாழ்வியல் உரிமையை பெற்றுக்கொள்ள உதவி செய்கிறோம்.

மனநலப் பிரச்சனைகள் உள்ள நோயாளிகளுக்கு நீங்கள் என்ன மாதிரியான வாழ்வியல் முறைகளை பயிற்றுவிக்கிறீர்கள் ?

வாழ்வியல் முறை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாக இருக்கும். ஆனால் அடிப்படையான சில வேலைகளைக்கூட செய்ய முடியாத சூழ்நிலையில் இருப்பவர்களுக்குத்தான் எங்களின் தேவை அவசியமாகிறது. மூளை வளர்ச்சி குறைபாடோ அல்லது மனநலக் குறைபாடோ உள்ளவர்களை சமூகமும் குடும்ப அமைப்பும் பார்க்கும் பார்வை வித்தியாசப்படும்.மனநலப் பிரச்சினை ஒருவரின் தனிப்பட்ட பிரச்னையாக இருந்தாலும்கூட அதில் சமூகத்தின்  பங்கு இருக்கிறது. ஒருவரின் இயலாமையைத் திரும்ப திரும்ப குற்றப்படுத்திக்கொண்டே இருப்பதால் நோயாளிகள் தொடர்ந்து இயலாமையை வெளிப்படுத்தக்கூடிய சூழலை சமூகமும் குடும்ப அமைப்பும் ஒரு சேர உருவாக்கித் தருகிறது.

மனநலப் பிரச்சனை காரணமாக அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை முதலில் குடும்ப உறுப்பினர்களிடம் பேசி அவர்களுக்குப் புரியவைத்து அதன் பிறகு பிரச்சனைக்கு உரியவரின்  தனித் திறனை குடும்ப உறுப்பினர்களின உதவியோடு கண்டறிந்து, அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்கள்  விரும்பும் அல்லது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட செய்ய உதவி செய்ய முடியும்.

மூளை மற்றும் நரம்பியல் குறைபாடு உடைய குழந்தைகளுக்கு என்ன மாதிரியான பயிற்சிகளைக்  கற்றுத்தருகிறீர்கள்?

ஆட்டிசம், டிஸ்லெக்சியா, அதீத துரு துருப்பு (ADHD)  டவுன் சிண்ட்ரோம் போன்ற குறைபாடுகளுக்கு புலனுணர்வு ஒருமைப்படுத்துதல் சிகிச்சை (sensory integration therapy) விளையாட்டு வழி சிகிச்சை (Play therapy) நடத்தை வழி சிகிச்சை (behavioural modification therapy) அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான திறன்களை வளர்ப்பது (ADL) போன்ற அடிப்படையான சிகிச்சை முறைகள் இருக்கிறது.

மூளை வளர்ச்சி குறைபாடு, மன வளர்ச்சி குறைபாடு, எலும்பு மற்றும் நரம்பு சார்ந்த பாதிப்புடைய நோயாளிகளுக்கு, பொருளாதாரத்தோடு தொடர்புடைய என்ன மாதிரியான பயிற்சிகளை தருகிறீர்கள்?

அவரவர் நோயின் தன்மையை பொறுத்து அதிகம் சுமையில்லாத அதே நேரத்தில் குறைந்தபட்ச வருவாயை பெற்றுத் தரக்கூடிய வேலைகளை கற்றுத் தருகிறோம். உதாரணமாக மண்பாண்டம் செய்தல், பொம்மை தயாரித்தல், மர வேலைப்பாடுகள், தோட்டக்கலை, கூடைமுடைதல், ஓவியம் வரைதல் ஆகியவற்றை அவர்களின் திறன்களைப் பொறுத்து  அவர்கள்  சுயாதீனமாக வாழ சிகிச்சையாளராக வழிவகை செய்கிறோம்.

வயோதிகர்கள் அதிகம் நரம்புதளர்ச்சி உடல் தளர்ச்சி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு ஆட்படுகின்றனர்.அவர்களுக்கு என்ன மாதிரியான பயிற்சி முறைகளை வழங்குகிறீர்கள்?

முதுமை காலத்தை எப்படி எதிர்கொள்வது என்ற குழப்பம் பெரும்பாலான முதியவர்களுக்கு இருக்கும். முதலில் அவர்களுக்கு பிறரை நம்பி இருக்காமல் தன்னால் தனித்து இயங்க முடியும் என்ற நம்பிக்கையை அளிக்க முயற்சி செய்வோம். அதுவே அவர்களுக்கு பெரிய ஊக்கமாக இருக்கும். முதியவர்களுக்கான செயற்கை உபகரண பயிற்சி வழங்குகிறோம்.

வீட்டின் அமைப்பில் பொது இடங்களில்  சில அடிப்படையான  விஷயங்களை சரி செய்தால் போதும் முதியவர்களின் அன்றாடங்கள் மகிழ்ச்சிக்கு உரியதாக மாறிவிடும். இந்திய சமூக அமைப்பில் இதெல்லாம் சாத்தியமாக இன்னும் சிறிது காலங்கள்  ஆகும்.

தொகுப்பு: இரா. சசிகலாதேவி

Tags :
× RELATED கவுன்சலிங் ரூம்