திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையன் சிறையில் அடைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த 12ம்தேதி அதிகாலை 4 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து ரூ.72.79 லட்சத்தை வெளிமாநில கும்பல் கொள்ளையடித்தது. வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில், 5 எஸ்பிக்கள் கொண்ட 9 தனிப்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி ஹரியானாவை சேர்ந்த முகமதுஆரிப்(35), ஆசாத்(37), கர்நாடக மாநிலம் கோலாரை சேர்ந்த குர்தீஷ் பாஷா(43), அசாமை சேர்ந்த அஷ்ரப் உசேன்(26) ஆகியோரை கைது செய்தனர். மேலும் கோலாரில் லாட்ஜில் பதுங்கி இருந்த நிஜாமுதீன்(28) என்பவரை கடந்த 2ம்தேதி போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலைக்கு அழைத்து வரப்பட்ட நிஜாமுதீனிடம் தனிப்படை போலீசார் கடந்த 4 நாட்களாக துருவித்துருவி விசாரணை நடத்தினர். அப்போது, ஏடிஎம் கொள்ளைக்கு சதி திட்டத்தை தீட்டி கொடுத்ததும் எந்த வழித்தடத்தில் வாகனங்கள் எளிதில் சென்றுவரலாம் என்பதை கண்டறிந்து அதற்கான ஏற்பாடுகளை செய்ததும், கோலாரில் லாட்ஜில் அறை எடுத்து தங்குவதற்கு உதவி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட காரை கோலாரில் நேற்று பறிமுதல் செய்தனர்.

தொடர் விசாரணையில், கொள்ளையடித்த ரூ.70 லட்சம் யார் யாரிடம் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது, எங்கே பணம் இருக்கிறது என்ற விவரத்தையும் நிஜாமுதீன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனவே, பணத்தை பறிமுதல் செய்ய போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஏடிஎம் கொள்ளையன் நிஜாமுதீனிடம் நடத்திய விசாரணை முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, நேற்று இரவு திருவண்ணாமலை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினர்.

அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் கவியரசன் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, நேற்று இரவு வேலூர் மத்திய சிறையில் நிஜாமுதீனை அடைத்தனர். திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

Related Stories: