திருத்தங்கல் மண்டலத்தில் பூட்டி கிடக்கும் சுகாதார வளாகங்களை உடனே திறக்க வேண்டும்: மக்கள் திறந்தவெளியில் ஒதுங்குவதால் சுகாதாரக்கேடு அபாயம்

சிவகாசி: சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் மண்டலத்தில் உள்ள 20 சுகாதார வளாகங்களை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். சிவகாசி மாநகராட்சியில் திருத்தங்கல் மண்டலத்தில் 24 வார்டுகள் உள்ளன. சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த மண்டலத்தில் 34 சுகாதார வளாகங்கள் உள்ளன. இதில் 20க்கும் மேற்பட்ட சுகாதார வளாகங்கள் முடங்கிக் கிடக்கின்றன. இது மக்களிடத்தில் அதிருப்தியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. எம்எல்ஏ நிதி, பொது நிதி உட்பட பல்வேறு அரசின் வளர்ச்சி நிதியில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுகாதார வளாகங்கள் பூட்டிக்கிடக்கின்றன.

முத்துமாரிநகர், சுக்ரவார்பட்டி ரோடு, பழைய சாட்சியாபுரம் ரோடு, பேட்டை தெரு, திருத்தங்கல் சாலை ஜா போஸ் கல்யாண மண்டபம் எதிர்புறம் மற்றும் செங்குளம் கண்மாய் அருகே உள்ள சுகாதார வளாகம், முருகன் காலனி, தேவராஜ் காலனி, கண்ணகி காலனி, எஸ்.ஆர்.என் பள்ளி பின்புறம் மற்றும் திருத்தங்கல் 2வது மண்டல அலுவலகத்தில் உள்ள சுகாதார வளாகம் என திருத்தங்கல் மண்டலத்தில் 20க்கும் மேற்பட்ட சுகாதார வளாகங்கள் பயன்பாடின்றி கிடக்கின்றன. இதில் திருத்தங்கல் 2வது மண்டல அலுவலகத்தில் சுகாதார வளாகம் கட்டி 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படாததால் பயன்பாடின்றி காட்சி பொருளாகவே உள்ளது.

ராதாகிருஷ்ணன் காலனியில் உள்ள சுகாதார வளாகம் திறக்கப்பட்ட நாள் முதலே பயன்பாடின்றிதான் உள்ளது. பழைய சாட்சியாபுரம் ரோடு பகுதியில் உள்ள சுகாதார வளாகம் கடந்த ஆண்டு மராமத்து பணிகள் செய்யப்பட்ட போதிலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளன. நகரில் ஏராளமான சுகாதார வளாகங்கள் திறக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ள நிலையில் புது பஸ் ஸ்டாண்டில் யாருமே பயன்படுத்தாத சுகாதார வளாகம் மட்டும் மராமத்து பணிகள் செய்யப்பட்டுள்ளன. திருத்தங்கல் மண்டலத்தில் பெரும்பாலான சுகாதார வளாகங்கள் பயன்படுத்தாமலே சேதமடைந்து காணப்படுகின்றது. பெரும்பாலான சுகாதார வளாகங்கள் பூட்டிக்கிடப்பதால் செங்குளம் கண்மாய் சாலை, மயானச்சாலை மற்றும் பல பகுதிகளில் உள்ள முட்புதர்களை திறந்தவெளி கழிப்பிடமாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் திருத்தங்கல் மணடலத்தின் பல பகுதிகளில் துர்நாற்றம் வீசுகின்றது. துர்நாற்றம் காரணமாக சாலை, கண்மாய் வழியாக நடந்து செல்லவே அருவருப்பாக உள்ளது. மேலும் சிலர் வாறுகால் பகுதியை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால் குடியிருப்பு வாசிகள் பெரும் சுகாதார சீர்கேட்டை சந்தித்து வருகின்றனர். திருத்தங்கல் மண்டலத்தில் அதிகாரிகளின் கவனம் அதிகம் தேவை என்றும் பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகங்களை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநகராட்சி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் திருத்தங்கல் மண்டலத்தில் 10 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத அனைத்து சுகாதார வளாகங்களையும் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் திமுக மாநகர செயலாளர் எஸ்.ஏ. உதயசூரியன் தலைமையில் ஆணையாளர்(பொ) பாண்டித்தாய் உதவியோடு ஆய்வு செய்யப்பட்டு மராமத்து பணிகள் நடைபெற்று சுகாதார வளாகங்களை திமுகவினர் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். தற்போது அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாததால் திருத்தங்கல்லில் சுகாதார பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: