மாநில, மாவட்ட அளவிலான செஸ், குங்பூ, சிலம்பம் போட்டிகளில் பதக்கங்களை குவிக்கும் மாணவர்கள்: மணலி அரசு பள்ளி சாதனை

சென்னை மணலி பாடசாலை தெருவில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, சுமார் 3,400 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 107 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பள்ளியில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் மாணவர்கள் நன்றாக படித்து 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் சிறந்த தேர்ச்சி பெறுகின்றனர். மாணவர்களுக்கு கல்வியுடன் தனித்திறமைகளை வளர்க்கும் விதமாக விளையாட்டு, ஓவியம், தற்காப்பு கலை போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்குகின்றனர். குறிப்பாக கால்பந்து, இறகுப்பந்து, செஸ், கேரம், வாலிபால், கால்பந்து, எறிப்பந்து, ஹாக்கி, கபடி, ஓட்டப்பந்தயம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், தட்டு, குண்டு மற்றும் ஈட்டி எறிதல் மற்றும் தற்காப்பு கலைகளான சிலம்பம், குத்துச்சண்டை, டேக்வாண்டோ, உசு போன்ற பல்வேறு தற்காப்பு கலைகளிலும் மாணவர்கள் சிறந்த முறையில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

குறிப்பாக தற்காப்பு கலையான சிலம்பத்தில் இப்பள்ளி மாணவர்கள் சிறந்த பயிற்சி பெற்று தேசிய, மாநில, மாவட்ட, குறுவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற பரிசுகளை வென்று சான்றிதழ்களையும் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இந்திய இளைஞர் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில், இப்பள்ளியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் யோகேஸ்வரன், 9ம் வகுப்பு மாணவன் கலாநிதி மாறன் ஆகிய இருவரும் தலா ஒரு தங்கம் வென்றுள்ளனர். 9ம் வகுப்பு மாணவன் தருண்குமார் வெள்ளி பதக்கம் வென்று உள்ளார். 11ம் வகுப்பு மாணவன் சந்திப்தாஸ் மாநில அளவில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்தார்.

தமிழ்நாடு பள்ளி கல்வி துறை சார்பில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 12ம் வகுப்பு மாணவன் ரேஷ்வந்த்குமார் முதலிடம் பிடித்து தங்கம் பரிசு வென்றார். திருவள்ளூர் மாவட்ட அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் 8ம் வகுப்பு மாணவன் விக்லேஷ்ராம் முதல் இடம் பிடித்து தங்கம் வென்றார். கேரளாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி, சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற குங்பூ போட்டியில் பங்கேற்ற 12ம் வகுப்பு மாணவன் அருண்ராஜ் இரண்டிலும் தங்கப் பதக்கம் வென்றார். 12ம் வகுப்பு மாணவன் கிரி 30 வினாடிகளில் 42 கிக் செய்து இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பிடித்தார்.மேலும், குரு வட்டம் அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் இரண்டாம் இடத்தை இப்பள்ளி மாணவர்கள் பிடித்தனர். 11ம் வகுப்பு பயிலும் கோடீஸ்வரன் என்ற மாணவன் தமிழ் திறன் அறிவுத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இவ்வாறு மாணவ, மாணவியர்கள் விளையாட்டு மற்றும் தற்காப்பு கலை போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றதோடு தொடர்ந்து தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க தீவிர பயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனர்.

* மாநகராட்சி கவுரவிப்பு மாணவ, மாணவியர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களும் பள்ளி வளாகங்கள் மற்றும் வகுப்பறைகளை தூய்மையாக வைத்துக் கொள்வதில் அக்கறையோடு செயல்படுகின்றனர். இதற்காக பள்ளி தலைமை ஆசிரியர் விஜயாவிற்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தூய்மைக்கான விருதை வழங்கி கவுரவித்தார். பயிற்சியாளர் தேவை சிறப்பாக செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளியில் விளையாட்டு, மற்றும் தற்காப்பு கலை பயிற்சியில் மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடனும் திறமையுடன் உள்ளனர். இவர்களுக்கு கூடுதலாக பயிற்சியாளர்கள் இருந்தால் இன்னும் விளையாட்டில் மேம்பாடு ஏற்படும் தேசிய, மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வெல்வார்கள் என்று பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

* மாணவ செல்வங்களே...! திங்களன்று வெளியாகும் இப்பகுதிக்கு கல்வி, விளையாட்டு, கலைப்பிரிவுகளில் நீங்கள் நிகழ்த்திய சாதனைகள் மற்றும் தனித்திறன் படைப்புகளை உங்களின் தலைமையாசிரியர் கையெழுத்துடன் அனுப்பி வைக்கலாம். புகைப்படங்கள் மிகவும் முக்கியம். சிறப்புடன் செயல்படும், தனித்துவமிக்க அரசுப்பள்ளிகள் குறித்த தகவல்களை, ஆசிரியர்கள் உரிய விபரங்களுடன் எழுதி படங்களுடன் அனுப்பி வைக்கலாம்.

Related Stories: