நாகர்கோவில் நாகராஜா திடலில் 6ம் தேதி தோள்சீலை போராட்ட 200வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம்: மு.க.ஸ்டாலின் - பினராயி விஜயன் பங்கேற்பு

நாகர்கோவில்: தோள்சீலை போராட்டம் 200வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் நாகர்கோவிலில் மார்ச் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள் தங்கள் இடுப்பிற்கு மேல் உடை அணிய தடை விதிக்கப்பட்டது. கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களும் இதனை கடைபிடிக்க கட்டாயப்படுத்தப்பட்டனர். உயர்சாதி பெண்கள் தங்கள் மார்பை மறைக்க அனுமதி அளிக்கப்பட்டது.

18 சமுதாயங்களை சேர்ந்த பெண்கள் திறந்த மார்புடன் நிற்க வேண்டும் என்று கட்டுப்பாடு இருந்தது. இதற்கு எதிராக 1822ல் போராட்டம் வெடித்தது. அதனை தொடர்ந்து 3 கட்ட போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது சீர்திருத்த கிறிஸ்தவ சமய தொண்டராக விளங்கிய சார்லஸ் மீட், ஆங்கிலேய தளபதி கர்னல் நேவால் என்பவருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதினார். அதன் பயனாக பத்மநாபபுரம் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. பின்னர் 1823ல் வெளியிடப்பட்ட நீதிமன்ற உத்தரவுப்படி சீர்திருத்த கிறிஸ்தவர்களுக்கு மட்டும் மேலாடை அணியலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

பின்னர் அடுத்தடுத்து நடைபெற்ற போராட்டங்களின் விளைவாக அனைத்து சமூகத்தினரும் தோள் சீலை அணிய தொடங்கினர். சனாதன சாதி பாகுபாட்டிற்கு எதிராக சமூக நீதிக்கு வித்திட்ட இந்த தோள்சீலை போராட்டம் 200வது ஆண்டு நிறைவையொட்டி நாகர்கோவிலில் வரும் 6ம் தேதி (திங்கள்) மாலை 5 மணிக்கு நாகராஜாகோயில் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் எம்.பி பெல்லார்மின் தலைமை வகிக்கிறார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்கள்.

தமிழ்நாடு அமைச்சர் மனோ தங்கராஜ் அறிமுக உரை வழங்குகிறார். நாகர்கோவில் மாநகர மேயருமான வக்கீல் மகேஷ் வரவேற்கிறார். மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், பீட்டர் அல்போன்ஸ், பாலபிரஜாபதி அடிகளார், விஜய் வசந்த் எம்.பி,  ஆகியோர் பேசுகின்றனர். எம்.எல்.ஏ.க்கள்  பிரின்ஸ், ராஜேஷ்குமார், விஜயதரணி உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

பொதுக்கூட்டத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இது தொடர்பாக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், நேற்று நாகர்கோவில் வந்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்ெகாண்டார்.

Related Stories: