நாகை மாவட்டம் நாகூரில் சிபிசிஎல் நிறுவன பைப்லைனில் உடைப்பு: பல்லாயிரம் லிட்டர் கச்சா எண்ணெய் கடலில் கலப்பு

நாகை: நாகூரில் சிபிசிஎல் நிறுவன பைப்லைனில் உடைப்பு ஏற்பட்டதால் பல்லாயிரம் லிட்டர் எண்ணெய் கடலில் கலக்கப்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டதால் சரி செய்ய சிபிசிஎல் நிறுவன ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.எண்ணெய் கடலில் கலந்ததால் நாகூர், பட்டினச்சேரி மீனவ கிராம மக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். கடல் முழுவதும் கச்சா எண்ணெய் பரவி உள்ளதால் மீன்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிபிசிஎல் அதிகாரிகள் நாகை வட்டாச்சியர் மற்றும் மீனவ துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  

நாகை மாவட்டம் நாகூர் அடுத்துள்ள பணங்குடியில் ஒன்றிய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனம் இயங்கி வருகிறது. பணங்குடியில் இருந்து காரைக்கால் கப்பல் துறைமுகத்துக்கு கடலுக்கு அடியில் பைப் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. பைப்லைன் 9 கீ.மீ. அளவிற்கு கடலுக்கு அடியில் போடப்பட்டுள்ளது. காரைக்கால் கப்பல் துறைமுகத்துக்கு செல்லும் பைப்லைன் நேற்று இரவு உடைந்து இருக்கிறது.

மீனவ கிராமமான பட்டினசேரியின் அருகே பைப்லைன் உடைந்துள்ளதால் நாகூர் கடற்பரப்பு முழுவதுமே கச்சா எண்ணெய் முழுவதும் பரவியுள்ளது. கடலில் ஆயிரம் லிட்டர் கணக்கில் எண்ணெய் கலந்ததால் நாகூர், பட்டினச்சேரி உள்ளிட்ட மீனவ கிராம மக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதே போல கடலில் எண்ணெய் கலந்து இருப்பதால் மீன்கள் இறந்து கடலில் இருந்து கரை ஒதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மீன்களை விற்பனை செய்யக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Related Stories: