மாமல்லபுரம் - புதுச்சேரி 4 வழிச்சாலைக்காக புதிதாக உயர் கோபுரம் அமைக்கும் பணி தீவிரம்: இடையூறாக இருந்த மின் வயர்கள் அகற்றம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் - புதுச்சேரி 4 வழிச்சாலை பணிக்காக புதிதாக உயர் கோபுரம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக, இடையூறாக உள்ள மின் வயர்களை எடுத்துச் செல்லும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை முக்கிய சாலையாக திகழ்ந்து வருகிறது. இந்த சாலை வழியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புதுச்சேரி மற்றும் தென் மாவட்டங்களுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சாலையின் முக்கியத்துவத்தை கருதி, இதனை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றி, மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி வரை 4 வழிச்சாலை அமைக்க கடந்தாண்டு ஒன்றிய அரசு முடிவெடுத்தது.

இதையடுத்து, மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரை சாலையை விரிவுபடுத்தி, விபத்துகளை குறைக்கும் வகையிலும், வாகனங்கள் விரைவாக செல்லும் வகையிலும் ஒன்றிய அரசு ரூ.1,270 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது. அதன்படி, முதல்கட்டமாக மாமல்லபுரம் - முகையூர் இடையே 30 கிமீ தூரம், 2வது கட்டமாக முகையூர் - மரக்காணம் வரை 30 கிமீ தூரம், 3வது கட்டமாக மரக்காணம் - புதுச்சேரி வரை 30 கிமீ தூரம் என மொத்தம் 90 கிமீ தூரம் வரை 4 வழி சாலை விரிவுபடுத்தும் பணி ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. மேலும், 4 வழி சாலை விரிவாக்க பணிக்காக இடையூறாக உள்ள மின் கம்பங்களை அகற்ற அனுமதி வழங்குமாறு ஒன்றிய சாலை மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தமிழக அரசிடன் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து, இடையூறாக உள்ள மின் கம்பங்களை அகற்றி புதிய உயர் கோபுர டவர்கள் அமைத்து அதன்மீது மின் வயர்களை பொருத்தித் தருமாறு நிபந்தபனை அடிப்படையில் தமிழக அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில், ஒன்றிய சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் முன்னிலையில், தனியார் நிறுவன ஊழியர்கள் மாமல்லபுரம் சிற்பக் கல்லூரிக்கு அருகே இசிஆர் சாலையில் இடையூறாக உள்ள பழைய மின் கம்பங்களில் இருந்த மின் வயர்களை அகற்றி, புதிய உயர் கோபுர டவர் அமைத்து, மின் வயர்களை எடுத்துச் செல்லும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Related Stories: