தாம்பரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளையொட்டி, ஏழை, எளிய மக்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தா.மோ.அமைச்சர், மேயர் வசந்தகுமாரி, எம்எல்ஏக்கள் வழங்கினர். தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளையொட்டி தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் திமுகவின் சார்பில் உணவு, நலத்திட்ட உதவிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில், குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் உணவு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, பகுதி செயலாளர்கள் பெர்னாட், கருணாகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.