கடலூர் கே.என். பேட்டை அருகே அளவுக்கு அதிகமாக செம்மண் ஏற்றி சென்ற லாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள்: போலீசார் பேச்சுவார்த்தை- பரபரப்பு

கடலூர்: கடலூர் அருகே உள்ள கே.என். பேட்டை பகுதியில் உள்ள செம்மண் குவாரியில் இருந்து அளவுக்கு அதிகமாக செம்மண் எடுப்பதாக கூறி அந்த பகுதி பொதுமக்கள் லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி முதல் நாகப்பட்டினம் வரை தேசிய நெடுஞ்சாலைதுறை சார்பில் நான்குவழி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நான்கு வழிச்சாலையானது, கடலூர் அருகே உள்ள கேஎன் பேட்டை வழியாக செல்கிறது. இதற்காக கேஎன் பேட்டையில் உள்ள செம்மண் குவாரிகளிலிருந்து தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் செம்மண் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அரசு அனுமதித்த அளவைவிட அந்தப் பகுதியில் இருந்து கூடுதலாக செம்மண் எடுக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து அவர்கள் குவாரி நிர்வாகிகளிடம் சென்று கேட்டபோது, அவர்கள் சரியான பதில் அளிக்காமல் அலட்சியமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் திருவந்திபுரம் ஒன்றிய துணை சேர்மன் அய்யனார் தலைமையில் இன்று காலை ஏராளமான பொதுமக்கள் அந்த மணல் குவாரிக்கு சென்று, லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், இந்த செம்மண் குவாரியில் இருந்து அரசு அனுமதித்த அளவை விட அதிக அளவில் மண் எடுப்பதால் இந்த பகுதியின் நீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும் இவ்வாறு தொடர்ந்து மண் எடுப்பதால் மண்வளமும் பாதிக்கப்பட்டு இங்குள்ள குன்னத்து ஏரியும் தூர்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இங்கிருந்து செம்மண் எடுப்பதை நிறுத்த வேண்டும் என்று கூறினர். இந்நிலையில் அதிகாரிகள், போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் ஒருமணிநேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: