பால் பற்கள் பராமரிப்பு!

நன்றி குங்குமம் டாக்டர்

பல் மருத்துவர் சண்முகப்ரியா

பல் பராமரிப்பு என்பதை நாம் குழந்தைப் பருவத்திலிருந்தே தொடங்கிவிடுவது நல்லது. இன்று, நான்கைந்து வயதுக் குழந்தைகளுக்குகூட சொத்தைப் பல் போன்ற பிரச்சனைகள் இருக்கின்றன. இதற்குக் காரணம் முறையான பராமரிப்பு இல்லாமைதான். சாக்லேட் உள்ளிட்ட இனிப்புகளை அளவுக்கதிகமாகச் சாப்பிடுவது அதன் பிறகு பற்களை முறையாக சுத்தம் செய்யாமல் விடுவது போன்ற காரணங்களால் சிறு வயதிலேயே பல் சொத்தை உருவாகிறது.

பொதுவாக, குழந்தைகளுக்கு ஆறு மாதங்களில் பால் பற்கள் முளைக்கும். பால் பற்கள் நிரந்தரப் பற்களைக் காட்டிலும் வெண்மையாகவும் அழகாகவும் இருக்கும். சில குழந்தைகளுக்கு பல் முளைப்பதில் சில மாதங்கள் தாமதம் ஏற்படலாம். இதற்காக கவலைப்படத் தேவை இல்லை.முதன் முதலில் பற்கள் முளைக்கும்போது  குழந்தைகளுக்கு ஈறில் உறுத்தல் இருக்கும். இதனால், கையில் கிடைத்ததை எல்லாம் குழந்தை, வாயில் போட்டுக்கொள்ளும். ஆகவே, வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படலாம். பெற்றோர்கள் இந்தத் தருணத்தில் மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு பற்களும் ஈறுகளும் வலுவாக கால்சியம் நிறைந்த உணவுகளைத் தர வேண்டும்.இப்போது, மவுத் வாஷ் லிக்விட்டினை குழந்தைகளுக்குக் கொடுக்கும் வழக்கம் அதிகமாக உள்ளது. அதிக வேதிப்பொருட்கள் நிறைந்த இந்த மவுத் வாஷ்கள் பற்களையும் வாயையும் பாதிக்கும். எனவே, இதனைத் தவிர்க்க வேண்டும்.பல் முளைக்கும் நேரத்தில் குழந்தைகளின் ஈறுகள் சிவந்தும் வீங்கியும் காணப்படும். ஒரு சில குழந்தைகளுக்கு காய்ச்சல், ஈறு வலி போன்றவையும் ஏற்படலாம்.

இது பொதுவான பிரச்னைதான் என்றாலும், பல் மருத்துவரிடம் ஆலோசித்து அதற்கான சிகிச்சை பெறுவது நல்லது. பால் குடிக்கும் குழந்தைகளை  குடித்த பின் அப்படியே தூங்கவைக்கக் கூடாது. இதனால், பாக்டீரியா வாய் முழுதும் பரவும்  இதனை நர்சிங் பாட்டில் கேரிஸ் (Nursing bottle caries) என்பார்கள். எனவே, பால் குடித்ததும், வாயைச் சுத்தம்செய்வது அவசியம்.

பாலுக்குப் பிறகு, தண்ணீர் கொடுத்தோ அல்லது ஈரப் பஞ்சினால் வாயையும், பற்களையும் துடைத்துவிட்டோ, சுத்தம் செய்யலாம். இதனால், பற்சிதைவு உருவாவது தடுக்கப்படும். கூடுமானவரை குழந்தைகளுக்கு இனிப்புகள், சாக்லெட்டுகள் போன்றவற்றை குறைந்த அளவே கொடுப்பதே நல்லது. குழந்தைகளுக்கு இனிப்பு மிகவும் பிடிக்கும்தான். ஆனால், அது அவர்களுக்கு ஹெல்த்தியா என்று நோக்க வேண்டியதும் மிகவும் அவசியம்.

காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்ற உணவுகளை அதிக அளவு கொடுத்துப் பழக்கப்படுத்துவது, அவர்களின் உடல் நலத்துக்கும் பற்களின் பாதுகாப்புக்கும் நல்லது.பால் பற்களின் வேருக்கு அடியில்தான், நிரந்தரப் பற்களின் ‘பல் மொட்டு’ (Tooth Bud) உள்ளது. பல் மொட்டு வளர வளர, பால் பற்களின் வேர் அரிக்கப்பட்டு, பால் பற்கள் விழுந்துவிடும். அந்த இடத்தில் நிரந்தரப் பற்கள் வளரத் தொடங்கும். நிரந்தரப் பற்களின் சரியான வளர்ச்சிக்கு, குழந்தைகளின் பால் பற்களை முறையாகப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் மிக அவசியம்.

குழந்தைகளுக்கு எல்லா பால் பற்களும் முளைத்த பிறகு, அவர்களுக்கான பிரத்யேகமான பிரஷ்கள் மற்றும் பேஸ்டுகளைக் கொண்டு பற்களைச் சுத்தம் செய்ய கற்றுத் தர வேண்டும். வாய் சுத்தம் என்பதை குழந்தைகளுக்கு முழுமையாகவும் சரியாகவும் கற்றுத் தர வேண்டியது அவசியம். பால் பற்கள் மென்மையானவை என்பதால் மிருதுவான பிரஷ்களே அவர்களுக்கு ஏற்றவை. பல் துலக்கும் போது மேல் கீழாகவோ பக்கவாட்டிலோ துலக்காமல் வட்ட வடிவில் கிளாக் வைஸிலோ ஆன்டி-கிளாக் வைஸிலோ பல் துலக்கக் கற்றுத் தர வேண்டும். இதனால், பற்களி எனாமல் கெடாமல் அப்படியே இருக்கும்.

பல் துலக்கிய பிறகு விரல்களால் ஈறுகளுக்கு மென்மையான அழுத்தம் தர வேண்டும். இதனால் ஈறுகளும் வலுவாகும். பல் துலக்கும்போது நாக்கை சுத்தமாக்குவதும் மிகவும் அவசியம்.  தினசரி காலையிலும் இரவிலும் இரு வேளை பல் துலக்குவது வாய்ப் பராமரிப்புக்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு ஃப்ளோரைடு குறைவான தரமான பற்பசைகளை வாங்கித் தருவது நல்லது. கலர் கலரான பேஸ்ட்டுகளைவிடவும் வெள்ளை நிற பேஸ்ட்டுகள் சிறந்தவை. பற்களிலோ ஈறுகளிலோ சிறு பிரச்சனை ஏற்பட்டாலும் தாமதிக்காமல் மருத்துவரை நாட வேண்டியது அவசியம். இதனால், மிகச் சிறிய வயதிலேயே பற்களை இழக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படாது.

தொகுப்பு - புகழ்

Related Stories: