பொடுகைப் போக்கும் 6 வழிகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

1. தேங்காய் எண்ணெய்  மற்றும் எலுமிச்சைப் பழச்சாறு மசாஜ்

எலுமிச்சைப் பழச்சாறு, தேங்காய் எண்ணெய் இரண்டிலும் தலா இரண்டு டேபிள்ஸ்பூன் எடுத்து நன்றாகக் கலந்துகொள்ளவும். இந்தக் கலவையைத் தலைமுடியில் மசாஜ் செய்வதுபோலத் தேய்த்து, 20 நிமிடங்கள் வரை ஊறவைக்க வேண்டும். பிறகு ஷாம்பூ தேய்த்து, தலையை அலசவும். தேங்காய் எண்ணெய், முடிக்கு ஊட்டமளிக்கும். எலுமிச்சைச்சாறு பொடுகுத் தொல்லையை நீக்கி, முடி வளர்ச்சிக்கு உதவும்.

2. தயிர் குளியல்

தயிரைத் தலையில் நன்றாகத் தேய்த்துக்கொள்ளவும். சுமார் ஒரு மணி நேரம் கழித்து, சிறிது ஷாம்பூ போட்டுக் குளிக்கலாம். தயிர், உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; முடிக்கு பளபளப்பையும் தரும். சைனஸ், ஒற்றைத் தலைவலி பிரச்னை இருப்பவர்கள், இதைத் தவிர்க்கவும்.

3. வெந்தயம் பேக்

இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தை ஊறவைக்கவும். மறுநாள் அதை அரைத்துக்கொள்ளவும். இதைத் தலையில் தேய்த்து, அரை மணி நேரம் ஊறவைத்து தலைக்குக் குளிக்கவும். இது உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; முடி வளர்ச்சிக்கு உதவும்.

4. ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு தோல்களை நன்கு அரைத்துக்கொள்ளவும். இதனுடன் சிறிது எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்துக்கொள்ளவும். இதைத் தலையில் தேய்த்து, 30 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு குளித்தால், பொடுகுத் தொல்லை நீங்கும்.

 5. வெங்காயம் மற்றும் வேப்பிலை

வெங்காயத்தை அரைத்து தலையில் தடவி, 30 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும். பிறகு, தலைக்குக் குளித்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம். அதேபோன்று, கைப்பிடி வேப்பிலைகளை பேஸ்ட் போல அரைத்துக்கொள்ளவும். இதைத் தலையில் தேய்த்து ஊறவைத்து, 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும். இதன் கசப்புத் தன்மை, தலையில் உள்ள பாக்டீரியா போன்ற தீங்கிழைக்கும் நுண்ணுயிரிகளை அழித்துவிடும்.

6. மருதாணி இலை

கைப்பிடி மருதாணி இலைகளை அரைத்து, அதில் சிறிது தயிர் மற்றும் எலுமிச்சைச்சாறு சேர்த்துக்கொள்ளவும். இதைத் தலைமுடியில் நன்றாகத் தேய்க்கவும். இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் கூந்தலை அலசி, குளிக்கலாம். இதனால் பொடுகுத் தொல்லை நீங்கும்; நரை முடி பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும். சைனஸ், ஒற்றைத் தலைவலி, சளி பிடிக்கும் பிரச்னை உள்ளோர் தவிர்க்கவும்.

தொகுப்பு - சாரு

Related Stories: